திடீரென பாய்ந்த அதிரடி உத்தரவு.. திருப்பூரில் ஊராட்சி செயலர் சஸ்பெண்ட்.. பின்னணி என்ன?
Tiruppur Panchayat Secretary Suspension : திருப்பூர் மாவட்டத்தில் மது போதையில் பணிக்கு வந்த மல்லேகவுண்டம்பாளையம் ஊராட்சி செயலரை பணியிடை நீக்கம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். இது அலுவலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .
திருப்பூர் மாவட்டம், மல்லேகவுண்டம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி செயலராக பணிபுரிந்து வருபவர் ராஜேந்திரன். இவர், இன்று மது போதையில் அலுவலகத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த பொதுமக்கள் அவரிடம் மது அருந்திவிட்டு அலுவலகத்திற்கு வந்தது தொடர்பாக விளக்கம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரால் அதிக பணிச்சுமை அளிக்கப்படுவதாகவும், இதில் ஏற்பட்ட கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி நிம்மதி இல்லாமல் தூங்க முடியவில்லை என்று ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன் கண்ணீருடன் தெரிவித்ததாக தெரிகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
ஊராட்சி மன்ற செயலாளர் பணியிடை நீக்கம்
அந்த தகவலின் பேரில், அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திற்கு ஆய்வு மேற்கொள்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டார். அவர், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட நிலையில், அந்த ஊராட்சியின் செயலாளர் ராஜேந்திரன் மது போதையில் பணிக்கு வந்திருந்தது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, இது தொடர்பான அறிக்கையை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு ஆய்வு மேற்கொண்ட அதிகாரி சமர்ப்பித்தார். அதன் அடிப்படையில், மல்லேகவுண்டம்பாளையம் ஊராட்சி மன்ற செயலாளர் ராஜேந்திரனை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் படிக்க: பழனி, மதுரையை தொடர்ந்து திருச்சியிலும் கைவரிசை.. ஸ்ரீரங்கம் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு.. திமுக முன்னாள் அமைச்சருக்கு தொடர்பு?




அலுவலக ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு
இதைத் தொடர்ந்து, ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அதற்கான உத்தரவு ஆணை அவரிடம் வழங்கப்பட்டது. இந்த அதிரடி சம்பவம் ஊராட்சி மன்ற அலுவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மல்லேகவுண்டம்பாளையம் ஊராட்சி மன்ற செயலாளராக பணிபுரிந்து வரும் ராஜேந்திரன் அடிக்கடி மது போதையில் பணிக்கு வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சக ஊழியர்கள் அவரிடம் கண்டித்துள்ளனர். ஆனால், அவர் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அலட்சியமாகவும், தினமும் மது போதையில் ஊராட்சி அலுவலகத்திற்கு வருவதுமாக இருந்துள்ளார்.
மதுபோதையில் பணிக்கு வருவதை வாடிக்கையாக கொண்டார்
இந்த நிலையில், ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பொதுமக்கள் வந்த நிலையில், அவர்களிடம் மது போதையில் ஊராட்சி செயலாளராக ராஜேந்திரன் பேசியுள்ளார். இதில், ஏற்பட்ட பிரச்சனை பூதாகரம் ஆன நிலையில், வட்டார வளர்ச்சி அலுவலரின் கவனத்திற்கு சென்றது. அதன் அடிப்படையில், ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன் தொடர்பாக ஆய்வு மற்றும் விசாரணை நடத்தப்பட்டு அதன் அடிப்படையில், அவரை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ஸ்ரீரங்கம் கோயில் நில ஆக்கிரமிப்பு சேகர்பாபுக்கு தெரியாமல் நடந்திருக்காது.. யாரையும் சும்மா விடமாட்டோம்.. அமைச்சர் ரமேஷ்!