AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கர்நாடகாவில் வெளிச்சத்துக்கு வந்த பெட்ரோல் நிலைய மோசடிகள் – 768 நிலையங்களில் முறைக்கேடு கண்டறியப்பட்டதால் அதிர்ச்சி

Petrol Pump Scam: கர்நாடகா முழுவதும் 805 பெட்ரோல் நிலையங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் 768 நிலையங்களில் உள்ள எரிபொருள் விநியோக இயந்திரங்களில் அளவீடு தொடர்பான முரண்பாடுகள் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முறைக்கேட்டை எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

கர்நாடகாவில் வெளிச்சத்துக்கு வந்த பெட்ரோல் நிலைய மோசடிகள்  – 768 நிலையங்களில் முறைக்கேடு கண்டறியப்பட்டதால் அதிர்ச்சி
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 19 Sep 2026 18:36 PM IST

பெட்ரோல் அல்லது டீசல் நிரப்பும்போது, இயந்திரத்தின் திரையில் காட்டப்படும் லிட்டர் அளவையே வாடிக்கையாளர்கள் பொதுவாக நம்புகின்றனர். ஆனால் கர்நாடகாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு இதுகுறித்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது. கர்நாடகா முழுவதும் 805 பெட்ரோல் நிலையங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் 768 நிலையங்களில் உள்ள எரிபொருள் விநியோக இயந்திரங்களில் அளவீடு தொடர்பான முரண்பாடுகள் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சோதனைகளின் அடிப்படையில் 101 பெட்ரோல் நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், மொத்தம் ரூ.6.66 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

எப்படி இந்த வித்தியாசம் ஏற்படுகிறது?

பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் நிரப்பும் இயந்திரங்களில் எரிபொருளின் அளவை கணக்கிடுவதற்கு பல்வேறு தொழில்நுட்பக் கருவிகள் உள்ளன. குறிப்பாக, எரிபொருள் செல்லும் அளவை கணக்கிடும் ஃப்ளோ மீட்டர் மற்றும் விநியோக அமைப்பின் செயல்பாட்டில் ஏற்படும் பிரச்னைகள் அளவீட்டில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் நிரப்பும் இயந்திரத்தில் குறிப்பிட்ட அளவு எரிபொருள் வழங்கப்பட்டதாகக் காட்டப்பட்டாலும், தொழில்நுட்பக் கோளாறு அல்லது அளவீட்டுச் சீரமைப்பில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக உண்மையில் எரிபொருள் நிரப்பப்படும் அளவு சற்று குறையலாம் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்க : நாளை தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டு முகாம்.. இகேஒய்சி மேற்கொள்ள சிறந்த வாய்ப்பு!

10 லிட்டருக்கு 50 மில்லி லிட்டர் வித்தியாசம்

இதுபோன்ற சிக்கல்களை தவிர்ப்பதற்காகவே பெட்ரோல் பங்குகளில் உள்ள எரிபொருள் நிரப்பும் இயந்திரங்களின் செயல்பாடு குறித்து அவ்வப்போது பரிசோதிக்கப்படுகிறது. எரிபொருள் அளவீட்டில் ஏற்படும் ஒவ்வொரு சிறிய வித்தியாசம் முறைகேடாகக் கருதப்படாது. இந்த நலையில் கர்நாடகா மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் தொடர்பாக அமைச்சர் தெரிவித்த தகவலின்படி, வாடிக்கையாளர் 10 லிட்டர் வரை பெட்ரோல் அல்லது டீசல் நிரப்பினால், அதில் 50 மில்லி லிட்டர் வரையிலான வித்தியாசம் அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள் வரும் என்று தெரிவித்தார்.

உதாரணமாக, எரிபொருள் நிரப்பும் இயந்திரத்தில் 10 லிட்டர் எனக் காட்டப்பட்ட நிலையில், சோதனையின்போது 9.95 லிட்டர் கிடைத்தால் அது அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் இருக்கும். ஆனால், இதைவிட அதிகமான அளவு குறைவாக இருந்தால் விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படலாம்.

அளவீட்டில் வித்தியாசம் இருப்பது மட்டும், பெட்ரோல் நிலையம் திட்டமிட்டு குறைவான எரிபொருளை வழங்குகிறது என்பதை உறுதி செய்யாது. எரிபொருள் நிரப்பும் இயந்திரத்தில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள், அளவீட்டுச் சீரமைப்பு தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட காரணங்களாலும் இதுபோன்ற வேறுபாடுகள் ஏற்படலாம். எனவே, இயந்திரங்களில் முறையான பரிசோதனை மேற்கொள்வதும், சீரான இடைவேளைகளில் பரிசோதனை செய்வதும் மிகவும் அவசியம். அதே நேரத்தில், விதிமுறைகளை மீறி குறைவான எரிபொருள் வழங்கப்படுகிறதா என்பதையும் அதிகாரிகள் சோதனை செய்வது அவசியமாகிறது.

இதையும் படிக்க : வெறும் ரூ.100-ல் தொடங்கிய தொழில்.. ஆண்டுக்கு ரூ.2 கோடி வருமானம்.. சிறு தொழில் மூலம் சாதித்து காட்டிய இளவரசி!

சந்தேகம் இருந்தால் என்ன செய்யலாம்?

பெட்ரோல் அல்லது டீசல் அளவு குறித்து சந்தேகம் ஏற்பட்டால், வாடிக்கையாளர்கள் உடனடியாக அளவைச் சரிபார்க்க பெட்ரோல் பங்க் ஊழியரிடம் கோரலாம். இதற்காக பெட்ரோல் பங்குகளில் வைத்திருக்கும் அங்கீகரிக்கப்பட்ட 5 லிட்டர் அல்லது 10 லிட்டர் அளவீட்டுக் கலனைப் பயன்படுத்தி சோதனை செய்ய முடியும். எரிபொருள் நிரப்பும்போது இயந்திரத்தின் திரையில் காட்டப்படும் பணம் மற்றும் லிட்டர் அளவை மட்டும் கவனிப்பதைவிட, சந்தேகம் ஏற்பட்டால் அளவீட்டையும் சரிபார்ப்பது பயனுள்ளதாக இருக்கும். பெட்ரோல் பங்குகளில் நடைபெறும் இதுபோன்ற சோதனைகள் முறையாகவும் தொடர்ச்சியாகவும் நடத்தப்படும்போது, அளவீட்டில் ஏற்படும் தவறுகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க முடியும்.

Follow Us