கர்நாடகா போனா முதல்வரை கட்டி வச்சிடுவாங்க.. விஜய் பற்றி மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அனிதா ராதாகிருஷ்ணன்!
Anitha Radhakrishnan Controversial CM Vijay : தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் குறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சரும், எம். எல். ஏ. வுமான அனிதா ராதா கிருஷ்ணன் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பேசும் பொருளாகி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தில் திராவிட முன்னேற்ற கழக பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுகவின் முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பேசினார். அப்போது, தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் குறித்து மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் ஒருமையில் பேசினார். இதில், தற்போதுள்ள தமிழக முதல் அமைச்சரால் மக்களுக்கு எந்த விதமான பயனும் இல்லை. அவர் இஷ்டத்துக்கு ஆடுகிறார், பாடுகிறார். இதைத் தவிர மற்ற எந்த விஷயமும் செய்வது கிடையாது. தற்போது, தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே உள்ள காவிரி நீர் பிரச்சனையில் என்ன பாடு படுது என்பது அனைவருக்கும் தெரியும். நான் ஹெலிகாப்டரில் சென்று நேரில் பார்ப்பேன் என்று கூறுகிறார். தேவை இன்றி எந்த மாநிலத்துக்கும் சென்று ஒப்பந்தம் போட்டு நமது மாநிலம் கெட்டு போய்விடக்கூடாது.
முதல்வர் விஜய்யை கர்நாடகத்தில் கட்டி வைத்துவிடுவார்கள்
தமிழக மக்களை காமராஜர் பெயரை கூறி கதை சொல்லி ஏமாற்றி கொண்டிருக்கிறார். இவற்றை தமிழக மக்களுக்கு நாம் தான் தெளிவுபடுத்த வேண்டும். முதல் அமைச்சர் ஜோசப் விஜய் கர்நாடக மாநிலம் சென்றால் அவரை அங்கேயே கட்டி வைத்து விடுவார்கள் என்று தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் இந்த பேச்சு மீண்டும் சர்ச்சையாகி உள்ளது. ஏற்கனவே, அனிதா ராதாகிருஷ்ணன் எம். எல். ஏ. தமிழக வெற்றிக் கழக அரசையும், தமிழக முதல் அமைச்சரையும் கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார்.




முதல்வர் விஜய்யை விமர்சித்து பேசிய எம்எல்ஏ
இதில், நான் ரவுடிக்கு ரவுடி. என்னை யாரும் தொட்டு பார்க்க முடியாது. முதல்வர் நாற்காலியில் 3 கால்கள் திமுகவின் கால்கள் ஆகும். திமுக ஆட்சி வரவில்லை என்று நினைக்க வேண்டாம் என்பன உள்ளிட்ட கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில், திருச்செந்தூர் தொகுதியில் ஆய்வில் ஈடுபட்டிருந்த அனிதா ராதாகிருஷ்ணன் எம். எல். ஏ.வை காவலர்கள் அதிரடியாக கைது செய்திருந்தனர்.
அனிதா ராதாகிருஷ்ணனுக்கு முன் ஜாமீன்
அவரிடம் சுமார் 10 மணி நேரத்துக்கு மேலாக போலீசார் விசாரணை மேற்கொண்டிருந்தனர். இதைத்தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, அவருக்கு முன் ஜாமீன் வழங்கி தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், மீண்டும் தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அனிதா ராதாகிருஷ்ணன் எம். எல். ஏ. பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
மேலும் படிக்க: கொளத்தூர் தொகுதி EVM ஆய்வு.. 30% வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி.. உயர் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு!!