“இத்தனை குவாரிகள், இத்தனை ஆயிரம் கோடி சொத்துக்கள் எப்படி வந்தது?”.. அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் மீது அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி குற்றச்சாட்டு!
Minister nirmal kumar Corruption Allegations: தூத்துக்குடியில் 70-க்கும் மேற்பட்ட சட்டவிரோதக் குவாரிகள் இயங்கி வந்ததாகவும், மாநில எல்லை தாண்டி வளங்கள் கடத்தப்படுவதைத் தவெக அரசு தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் கீதா ஜீவன் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
தூத்துக்குடி, ஆகஸ்ட் 01: தூத்துக்குடி மாவட்டத்தில் பல ஆண்டுகளாகக் கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வந்த நிலைக்குத் தவெக அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் நிர்மல் குமார், முன்னாள் திமுக அமைச்சர்களான அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் கீதா ஜீவன் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த அரசியல் மற்றும் கனிம வளக் கொள்ளை குறித்து விரிவாக பேசினார்.
இதையும் படிக்க: “சிக்கன் பிரியாணி சாப்பிட்டா குழந்தைங்க கெட்டுப்போயிடுவாங்களா?”.. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ராஜ்மோகன்!
திமுக குடும்ப பின்னணி:
தூத்துக்குடியில் எந்த ஆட்சி வந்தாலும் மக்களுக்குத் தொந்தரவுதான் மிஞ்சியது. திமுக ஆட்சியில் இருந்தபோது, சகோதரி கீதா ஜீவனும், அனிதா ராதாகிருஷ்ணனும் மாவட்டத்தை ஆளுக்கொரு பக்கமாகப் பிரித்துக் கொண்டு கனிம வளங்களைக் கொள்ளையடிக்கும் வேலையைச் செய்தனர். இந்தப் பக்கம் அண்ணன், அந்தப் பக்கம் அக்கா எனப் பிரித்து வைத்துக்கொண்டு ஆதிக்கம் செலுத்தினர்.
முரட்டு பக்தரின் குடும்ப பின்னணி:
முன்னாள் அமைச்சர் பெரியசாமியை ‘முரட்டு பக்தர்’ எனக் குறிப்பிட்ட அமைச்சர், கருணாநிதி நடைபயணம் சென்றபோது தூக்கிச் சென்றதற்காக ஒட்டுமொத்தத் தூத்துக்குடி மாவட்டமே அந்த ஒரே குடும்பத்திற்குத் தாரை வார்க்கப்பட்டதாகச் சாடினார். இதன் விளைவாக, அண்ணன் மற்றும் தங்கச்சி இருவரும் எம்பி மற்றும் அமைச்சர்களாகி மாவட்டத்தைக் கொள்ளையடித்ததாகக் குற்றம் சாட்டினார்.
“70-க்கும் மேற்பட்ட சட்டவிரோதக் குவாரிகள்”
தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வந்த குவாரிகள் மற்றும் தொழிற்சாலைகளின் அக்கிரமங்கள் குறித்துத் தொடர்ந்து பேசிய அமைச்சர், சாதாரண வியாபாரிக்கு இத்தனை ஆயிரம் கோடி சொத்தா?: “தான் ஒரு சாதாரண வியாபாரி எனக் கூறிக்கொள்ளும் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு இத்தனை கல்குவாரிகளும், இத்தனை ஆயிரம் கோடிகளில் சொத்துக்களும் எப்படி வந்தது? இவர்களால் மக்களுக்கு என்ன பயன் கிடைத்தது?” எனக் கேள்வி எழுப்பினார்.
தொழிற்சாலைகளில் சட்டவிரோத வசூல்:
தூத்துக்குடியைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகள் மற்றும் உள்ளூர் ஒப்பந்தப் பணிகளில் குறிப்பிட்ட தொகை இன்னமும் திமுக சார்பாக வசூலிக்கப்பட்டு வருகிறது. கீதா ஜீவனுக்குத் தெரியாமல் இங்கு எதுவுமே நடப்பதில்லை. தூத்துக்குடியைச் சுற்றி 70-க்கும் மேற்பட்ட சட்டவிரோதக் குவாரிகள் செயல்பட்டு வந்தன. நாகர்கோவில், கன்னியாகுமரி, கோயம்புத்தூர் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகளில் தமிழ்நாட்டின் மணலும் கற்களும் வெளிமாநிலங்களுக்குக் கடத்தப்பட்டு வந்தன. ஆனால், முதலமைச்சர் விஜய் பிறப்பித்த ஒரே ஒரு அதிரடித் தடையாணை மூலம் மாநில எல்லை கடந்து இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுவது முற்றிலுமாகக் கட்டுப்படுத்தப்பட்டு, அனைத்துச் சட்டவிரோதக் குவாரிகளும் முடக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: தாய் என்றும் பார்க்கவில்லை.. தம்பி என்றும் நினைக்கவில்லை.. ரூ.1 கோடிக்காக அண்ணா நகரில் அரங்கேறிய இரட்டை கொலை!
தொடரும் மக்கள் நலப் பணிகள்:
தற்போதைய அரசின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய அமைச்சர், “பொதுவாகப் புதிய அரசு பதவிக்கு வந்தவுடன் முதல் இரண்டு மாதங்கள் எங்கு போய் வசூல் செய்யலாம், எங்குப் பங்கு பிரிக்கலாம் என்றுதான் யோசிப்பார்கள். ஆனால், நமது தவெக அரசு சத்தமில்லாமல் மக்கள் நலத்திட்டங்களை மட்டுமே செயல்படுத்தி வருகிறது. தூத்துக்குடியில் நமது இரண்டு அமைச்சர்களும் நிர்வாகிகளும் மாநகராட்சி மேம்பாட்டிற்காகக் கொடுக்கப்பட்டுள்ள அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்ற தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்” என கூறினார்.