கொளத்தூர் தொகுதி EVM ஆய்வு.. 30% வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி.. உயர் நீதிமன்றத்தை நாட திமுக முடிவு!!
Kolathur Constituency EVM Inspection Issue: கொளத்தூர் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்ததில், 30 சதவீதத்திற்கும் அதிகமான இயந்திரங்களில் சீல் இல்லாதது மற்றும் புதிய முகவரி சீட்டுகள் ஒட்டப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாகக் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகத் திமுக செய்தித் தொடர்பாளர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்.
சென்னை, ஆகஸ்ட் 01: கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறையாகப் பாதுகாக்கப்படவோ அல்லது பராமரிக்கப்படவோ இல்லை எனவும், அங்கு முறையான தேர்தல் நடைபெறவில்லை எனவும் திமுக சட்டத்துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ குற்றஞ்சாட்டியுள்ளார். கொளத்தூர் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: “சிக்கன் பிரியாணி சாப்பிட்டா குழந்தைங்க கெட்டுப்போயிடுவாங்களா?”.. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ராஜ்மோகன்!
வாக்கு சரிபார்க்கும் பணி:
கொளத்தூர் தொகுதியில் உள்ள 14 வாக்குச்சாவடிகளில் தமக்கு பதிவாகியிருக்க வேண்டிய வாக்குகள் முறையாகப் பதிவாகவில்லை/எண்ணப்படவில்லை என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தேர்தல் கிடங்கில், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்டத் தேர்தல் அதிகாரி முன்னிலையில் இந்தச் சரிபார்ப்புப் பணிகள் ஜூலை 29 முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்கள்:
8-இல் 3 இயந்திரங்களில் கோளாறு: இதுவரை ஆய்வு செய்யப்பட்ட 8 வாக்குப்பதிவு இயந்திரங்களில் 3 இயந்திரங்கள் (30%-க்கும் மேல்) சரியாக இல்லை. குறிப்பிட்ட சில இயந்திரங்களில் அதிகாரப்பூர்வ சீல்கள் இல்லை. அதற்கு மாறாகப் புதிய அட்ரஸ் டேக்குகள் ஒட்டப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி எண் 157-க்கான இயந்திரத்தில் முகவரிச் சீட்டே இல்லாத நிலை கண்டறியப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்திடம் 19 கேள்விகள்:
இந்த முறைகேடுகள் குறித்து மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் ஜூலை 30-ஆம் தேதி திமுக சார்பில் அதிகாரப்பூர்வமாகக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. பெல் பொறியாளர்கள் பதில் அளிக்கம்மா? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தயாரித்த ‘பெல்’ நிறுவனப் பொறியாளர்களிடம் விளக்கம் கேட்கும் வகையில் 19 கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
இயந்திரத்தைப் பாதுகாக்கக் கோரிக்கை:
ஜூலை 29, 30, 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் நடந்த ஆய்வு நடைமுறைகள் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் சான்றளிக்கப்பட்ட நகலைத் தருமாறும் கேட்கப்பட்டுள்ளது. போலி முகவரிச் சீட்டு கூட இல்லாமல் இருந்த வாக்குச்சாவடி 157-ன் இயந்திரத்தைச் சீலிட்டுப் பத்திரமாக வைக்க வேண்டும் எனக் காவல்துறையினரிடமும் தேர்தல் அதிகாரியிடமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: தாய் என்றும் பார்க்கவில்லை.. தம்பி என்றும் நினைக்கவில்லை.. ரூ.1 கோடிக்காக அண்ணா நகரில் அரங்கேறிய இரட்டை கொலை!
“நீதிமன்றத்தை நாடுவோம்!” – திமுக முடிவு:
ஆய்வில் 30 சதவீதத்திற்கும் அதிகமான இயந்திரங்களில் சிக்கல்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், இந்த முழுமையான ஆய்வு நடைமுறையிலும், தேர்தல் முடிவிலும் நம்பிக்கை இல்லை எனத் திமுக தெரிவித்துள்ளது. கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் இதுகுறித்த தகவல்களைத் தெரிவித்து, தேர்தல் ஆணையத்திடமிருந்து ஆய்வறிக்கையின் சான்றளிக்கப்பட்ட நகல்கள் கிடைத்தவுடன், உயர் நீதிமன்றத்தையோ அல்லது உச்ச நீதிமன்றத்தையோ நாடி சட்டப் போராட்டம் தொடரப்படும் என என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்.