பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை.. சிபிஐ கையில் ஃபைல்.. சிக்கப்போவது யார்?
Bahujan Samaj Party Armstrong Murder Case : பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். மேலும், இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ளவர்களை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக செயல்பட்டு வந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர், சென்னை மாவட்டத்தில் பெரம்பூர் பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2024- ஆம் ஆண்டு அந்தப் பகுதியில் சென்ற போது ஆம்ஸ்ட்ராங்கை கொடூரமாக வெட்டினர். இதில், பலத்த வெட்டு காயம் அடைந்த அவர் சென்னை கிரீன் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த கொலை சம்பவத்தில் சுமார் 30 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டனர். மேலும், 7,800 பக்க குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
சிபிஐ விசாரணை கோரி வலியுறுத்தல்
இந்த வழக்கில் தொடர்புடைய இருவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டனர். ஒருவர் மருத்துவ சிகிச்சையின் போது உயிரிழந்தார். மற்றவர்களின் சிலருக்கு ஜாமீன் கிடைத்தது. இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை தமிழக போலீசார் நேர்மையாக விசாரிக்கவில்லை என்று அவரது மனைவி பொற்கொடி குற்றம் சாட்டினார். இதை தொடர்ந்து, பகுஜன் சமாஜ் கட்சியின் அகில இந்திய தலைவர் மாயாவதியும் தமிழகத்துக்கு நேரில் வந்து இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
மேலும் படிக்க: 200 யூனிட் இலவசம்னு சொல்லிட்டு 4 மடங்கு மின் கட்டணமா? தவெக அரசுக்கு எதிராக சீறிய சீமான்!




அரசின் மேல்முறையீட்டு மனுக்கு இடைக்கால தடை
ஆனால், அப்போதைய திமுக அரசு இதற்கு உடன்படவில்லை. இதனால், ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் இம்மானுவேல் சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2025- ஆம் ஆண்டு டிசம்பர் 24- ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதற்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது.
கொலை வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள்
இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில், தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதனால், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேல்முறையீட்டு மனு திரும்ப பெறப்பட்டது. இதைத் தொடர்ந்து கொலை வழக்கின் அனைத்து ஆவணங்களையும் சிபிஐ அதிகாரிகளிடம் சென்னை போலீசார் ஒப்படைத்தனர். அதன்படி, சிபிஐ அதிகாரிகள் புதிய வழக்கு பதிவு செய்து, சிறையில் இருப்பவர்களை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.
மேலும் படிக்க: தமிழக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி தடைபட இதுவே மூல காரணம்.. உண்மையை போட்டுடைத்த ராகுல் காந்தி!