சென்னையில் குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக ஆசை வார்த்தை.. ரூ.63 லட்சத்தை சுருட்டிய மோசடி ஆசாமிகள் கைது!
Chennai Crime : சென்னையில் குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக கூறி தங்க வியாபாரியிடம் ரூ.63 லட்சத்தை மோசடி செய்ததாக 4 பேரை எழும்பூர் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரை வலை வீசி தேடி வருகின்றனர்.
சென்னை மாவட்டம், அமைந்தகரை பகுதியை சேர்ந்தவர் அன்மோல் ஜெயின். தங்க வியாபாரியான இவர், தனது உறவினரான நமீத் என்பவருடன் சேர்ந்து மொத்தமாக தங்கம் வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், கடந்த ஜூலை 17- ஆம் தேதி நமீத் தனது உறவினரான அன்மோல் ஜெயினை தொலைபேசி வாயிலாக அழைத்து குறைந்த விலைக்கு தங்கம் வழங்குவதாகவும், நான் கூறும் இடத்தில் சென்று அந்த தங்கத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறி உள்ளார். இதை உண்மை என நம்பிய அன்மோல் குறைந்த விலைக்கு கிடைக்கும் தங்கத்தை வாங்க முடிவு செய்தார். அதன்படி, நமீத் அறிவுறுத்தலின் பேரில், ராஜேந்திர ஜெயின் என்பவர் அன்மோலை எழும்பூர் பவுண்டன் பிளாசாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, அன்மோலை ஸ்ரீராம் என்பவர் சந்தித்து பேசி உள்ளார்.
ரூ.63 லட்சத்தை மோசடி செய்து சம்பவம்
அப்போது, ஸ்ரீ ராமு உடன் சக்தி என்ற நபர் உடன் வந்து இருந்தார். சக்தி என்பவரும், அவரது தந்தை சாந்த குமாரும் எழும்பூர் பவுண்டன் பிளாசாவில் கடை வைத்திருப்பதாகவும், பெரிய அளவில் தங்கம் வியாபாரம் செய்வதாகவும் அன்மோல் ஜெயினிடம் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, கவுண்டன் பிளாசா அருகே வைத்து அன்மோல் ஜெயினிடம் இருந்து ரூ.63 லட்சத்தை சக்தி உள்ளிட்டோர் பெற்றுள்ளனர். உடனே, மாடிக்கு சென்று பணத்தை வைத்து விட்டு தங்கத்தையும், அதற்கான ரசிதையும் கொண்டுவருவதாக கூறிவிட்டு சென்றார்.
மேலும் படிக்க: சேலத்தில் பயங்கரம்: மூக்குத்திக்காக முதிய தம்பதி அடித்துக் கொலை




எழும்பூர் காவல் நிலையத்தில் புகார்
சிறிது நேரத்தில் அன்மோல் ஜெயினை செல்போனில் தொடர்பு கொண்ட சாந்தகுமார் ஜெமினி பாலம் அருகே உள்ள ஸ்ரீ மிட்டாய் உணவகத்துக்கு செல்லுமாறும், அங்கு தங்கம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். இதை நம்பிய அன்மோல் அங்கு சென்று நீண்ட நேரம் காத்திருந்தும் யாரும் வராததால் கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர், ஸ்ரீ ராமுவை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். உடனே, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அன்மோல் ஜெயின் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
4 பேர் கைது- ஒருவருக்கு வலை வீச்சு
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், சாந்தகுமார், ஸ்ரீராம், ராம்குமார், உதய்கிரண் ஆகிய 4 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மற்றும் 2 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். தலைமுறைவாக உள்ள சக்தியை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க: அம்மனாக திரிஷா – கோவில் திருவிழா பேனரால் சர்ச்சை – 2 பேர் மீது வழக்குப்பதிவு