தனி ரூட்டில் ஸ்ரீ காந்திமதி.. ராமதாஸ் பாதையில் புது அரசியல் இயக்கம்? டிசம்பரில் வெளியாகிறது அறிவிப்பு!
Ramadoss Daughter New Political Movement : பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் மகள் ஸ்ரீ காந்திமதி புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கி இருப்பதாகவும், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் 6- ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாசின் மகள் ஸ்ரீ காந்திமதி புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க இருப்பதாகவும், டிசம்பர் 6- ஆம் தேதி அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. பாமகவில் நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும், கட்சியின் தலைவருமான அன்புமணிக்கு இடையே கடும் மோதல் போக்கு நிலவியது. இதன் காரணமாக, அன்புமணி, ராமதாஸ் இரு அணிகளாக கட்சியினர் பிரிந்தனர். அப்போது, பாமகவின் செயல் தலைவராக தனது மகள் ஸ்ரீ காந்தியை ராமதாஸ் நியமித்தார். அத்துடன், தனது ஆதரவாளர்களை பொறுப்பாளர்களாகவும் அறிவித்திருந்தார். தொடர்ந்து, அன்புமணி தரப்பு பல்வேறு சட்டப் போராட்டங்களை முன்னெடுத்து கட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.
ராமதாஸ் பாதையில் புதிய இயக்கம் தொடங்கும் ஸ்ரீ காந்திமதி
இந்த நிலையில், ராமதாஸ் விட்டு சென்ற சமூக நீதி பாதையை தொடர்வதாக ஸ்ரீ காந்திமதி தனது ஆதரவாளர்களுடன் புதிய அரசியல் பயணத்தை தொடங்குவதற்கான ஆலோசனைகளை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ஸ்ரீ காந்திமதி தனி அரசியல் பாதையை தொடர முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, புதுச்சேரி முதல்வரும், என். ஆர். காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமியை ஸ்ரீ காந்திமதி தனது மகன் முகுந்தனுடன் சேர்ந்து சந்தித்து இருந்தார்.
மேலும் படிக்க: காக்கிச் சட்டை கனவு நனவாகிறது.. தமிழக காவல்துறையில் 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப உத்தரவு.. முதல்வர் விஜய் அறிவிப்பு!




சென்னையில் டிச.6- இல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இதன் மூலம் ஸ்ரீ காந்தி என். ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பதாகவும், தமிழகத்தில் என். ஆர். காங்கிரஸ் கிளையை தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில்தான், ஸ்ரீ காந்திமதி புதிய அரசியல் இயக்கத்தை தொடங்க இருப்பதாக தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன. அதன்படி, சென்னையில் டிசம்பர் 6- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) அரசியல் இயக்கத்தை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இயக்கம் சமத்துவம், சமூக நீதி, சுயமரியாதை ஆகியவற்றை அடித்தளமாக கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
அன்புமணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட வாய்ப்பு
அத்துடன் மக்கள் நலன், எதிர்கால தலைமுறையின், உரிமைகள் ஆகியவற்றை லட்சியமாகக் கொண்டு இந்த இயக்கம் செயல்படும் என்று ஸ்ரீ காந்தியின் ஆதரவாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. அதே வேளையில், ஸ்ரீ காந்திமதி தொடங்கும் இந்த புதிய அரசியல் இயக்கம் அன்புமணி தரப்புக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும் என்றும் ஸ்ரீ காந்தியின் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் அன்புமணி, ராமதாஸ் ஆகியோர் இடையே இணக்கம் ஏற்பட்டு உள்கட்சி பூசல் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: திமுகவுக்கு மேலும் ஒரு நெருக்கடி.. நெடுஞ்சாலை துறையில் ரூ.2200 கோடி ஊழல்.. எ.வ.வேலு தலையில் இடியை இறக்கிய ஆதவ் அர்ஜூனா!