செஞ்சி சிறுமி மாயமான விவகாரம்.. காட்டில் எலும்பு கூடுகள் மீட்பு.. அதிர்ச்சியில் பெற்றோர்.. நடந்தது என்ன!
Gingee Girl Missing : விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி சிறுமி காணாமல் போன பகுதியில் உள்ள பரதன் ஏரி அருகே மனித எலும்புக்கூட்டை சிபிசிஐடி போலீசார் மீட்டுள்ளனர். அது பரிசோதனைக்காக மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சியில் சிறுமி காணாமல் போன பகுதியில் சிபிசிஐடி போலீசார் மேற்கொண்ட சோதனையில் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி குளக்கரை தெருவில் வசித்து வருபவர் வடிவேலு- பவானி தம்பதி. இவர்களது 7 வயது மகள் ஹேமலதா. இவர், கடந்த அக்டோபர் 11- ஆம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மறுநாள் காலை திடீரென மாயமானார். இந்த சம்பவம் நிகழ்ந்து 1 மாதத்தை தாண்டியுள்ள நிலையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டும் தற்போது வரை எந்த துப்பும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், செஞ்சி அருகே உள்ள சிறுவாடி காப்புக்காடு வனப்பகுதியில் சிபிசிஐடி போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
செஞ்சி பகுதியில் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு
இதில், அந்தப் பகுதியில் உள்ள பரதன் தாங்கல் ஏரி அருகே முள்புதரில் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த எலும்புக்கூடுகள் யாருடையது என்பது தொடர்பாக போலீசார் அதனை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அத்துடன், மாயமான சிறுமி தொடர்பாக வேறு ஏதேனும் சிறிய தடயங்கள் கிடைக்குமா என்று சிபிசிஐடி போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமி காணாமல் போன பகுதியில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கை முன்னதாக சத்யமங்கலம் போலீசார் 10 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும் படிக்க: காக்கிச் சட்டை கனவு நனவாகிறது.. தமிழக காவல்துறையில் 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப உத்தரவு.. முதல்வர் விஜய் அறிவிப்பு!




செஞ்சியில் சிபிசிஐடி டிஐஜி தீவிர விசாரணை
ஆனால், துப்பு துலங்காத காரணத்தால் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. அதன்படி, சிபிசிஐடி போலீசார் வழக்கை கையில் எடுத்து 22 நாள்களுக்கு மேல் ஆகும் நிலையில், தற்போது வரை எந்த துப்பும் பிடிக்கவில்லை. இந்த நிலையில், சிபிசிஐடி டி. ஐ. ஜி. விக்ரமன் நேற்று வியாழக்கிழமை ஆலம்பூண்டி கிராமத்துக்கு நேரில் சென்று சிறுமியின் தாய், தந்தை உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டிருந்தார். அத்துடன், இந்த வழக்கை விசாரித்து வரும் டிஎஸ்பிக்கள் வேல்முருகன், கீதா ஆகியோரிடம் டிஐஜி விக்ரமன் ஆலோசனை மேற்கொண்டார்.
சிபிசிஐடி குழுவில் கூடுதலாக 2 இன்ஸ்பெக்டர்கள் நியமனம்
சுமார் 2 மணி நேரமாக நடைபெற்ற இந்த ஆலோசனையில் விசாரிக்கப்பட்ட நபர்கள், வழக்கு தொடர்பாக எரிக்கப்பட்ட தடயங்கள், சிசிடிவி கேமரா காட்சிகள், தொழில்நுட்ப ரீதியான விசாரணையின் முன்னேற்றம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். இந்த வழக்கை அடுத்தபடியாக எப்படி முன்னெடுத்து செல்வது என்பது குறித்தும் ஆலோசனை வழங்கினார். இதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை விரைவு படுத்துவதற்காக 2 சிபிசிஐடி இன்ஸ்பெக்டர்கள் குமார் மற்றும் சாஸ்தா ஆகியோர் அந்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: திமுகவுக்கு மேலும் ஒரு நெருக்கடி.. நெடுஞ்சாலை துறையில் ரூ.2200 கோடி ஊழல்.. எ.வ.வேலு தலையில் இடியை இறக்கிய ஆதவ் அர்ஜூனா!