37 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கு.. மேற்குவங்காளத்தை சேர்ந்த 4 பேருக்கு.. 12 ஆண்டுகள் சிறை.. கோவை நீதிமன்றம் தீர்ப்பு!
Coimbatore Ganja Smuggling Case : கோயம்புத்தூரில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மேற்கு வங்காள நாட்டை சேர்ந்த ஒரு பெண் உள்பட 4 பேருக்கு போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி தேர் நிறுத்தம் பகுதியில் கடந்த 2024- ஆம் ஆண்டு அந்தப் பகுதி எல்லைக்கு உள்பட்ட காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அந்தப் பகுதியில் போலீசார் வருவதைப் பார்த்து ஒரு பெண் உள்பட 4 பேர் கையில் வைத்திருந்த மூட்டைகளை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடினர். இதைப் பார்த்த போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, அவர்கள் போட்டு விட்டு சென்ற மூட்டைகளை பிரித்து சோதனை செய்ததில் கஞ்சா இலைகளை வைத்திருந்தது தெரிய வந்தது.
மேற்கு வங்காள நாட்டை சேர்ந்த ஒரு பெண் உள்பட 4 பேர்
அதில், சுமார் 37 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. பின்னர், கைது செய்யப்பட்டவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், கைதானவர்கள் மேற்கு வங்காளத்தை சேர்ந்த பியாருல் ஷேக், ஷகீல் முஸ்தாக், ஹுமாயூன் ஷேக், நர்கீஸ் பீபி ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்கள் வட மாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலமாக கஞ்சாவை கடத்தி வந்து கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் படிக்க: செஞ்சி சிறுமி மாயமான விவகாரம்.. 33வது நாளாக தொடரும் தீவிர தேடுதல்.. காப்புக்காட்டில் மோப்ப நாய்களுடன் களமிறங்கிய சிபிசிஐடி!
போதை தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் ஒரு பெண் உள்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பான கோயம்புத்தூர் போதை பொருள்கள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், பல்வேறு தரப்பு சாட்சியங்களிடம் நீதிபதி விசாரணை மேற்கொண்டிருந்தார். அத்துடன், 4 பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆகியவற்றை நீதிமன்றத்தில் போலீசார் சமர்ப்பித்து இருந்தனர்.
ஒரு பெண் உள்பட 4 பேருக்கு 12 ஆண்டுகள் தண்டனை
இந்த நிலையில், கஞ்சா வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியது. இந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை நீதிபதி ராஜலிங்கம் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கில் தீர்ப்பு வழங்கினார். இதில், குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் குற்றவாளி என்றும், அவர்களுக்கு 12 ஆண்டுகள் தண்டனையும், ரூ .1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதைத் தொடர்ந்து, அவர்கள் 4 பேரும் கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் படிக்க: தமிழகம் முழுவதும் நூலகங்களில் 70,674 போலி AI புத்தகங்கள் கண்டுபிடிப்பு.. தோண்ட தோண்ட வெளிவந்த உண்மை..