கோவையில் தவெக நிர்வாகி மீது பாலியல் சீண்டல் மற்றும் சாதிய வன்கொடுமை புகார் – பெண்ணிடம் 3 மணி நேரமாக விசாரணை
TVK Functionary Harassment Allegations : தவெக காரமடை ஒன்றிய செயலாளர் கருப்புசாமி தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் அதற்கு உடன்படாததால் பட்டியலின சமூகத்தை சேர்ந்த தன்னை சாதி ரீதியாக இழிவுபடுத்தியதாகவும் கோவை காரமடை பகுதியை சேர்ந்த தமிழக வெற்றிக் கழக பெண் நிர்வாகி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கோவை, நவம்பர் 13 : கோவை காரமடையை அடுத்துள்ள காளம்பாளையம் ஊராட்சியின் தவெக செயலாளராக சீளியூரை சேர்ந்த செளமியா(26) கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார்.இவர் நவம்பர் 11, 2026 நேற்று முன்தினம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றினை அளித்திருந்தார்.
கோவையில் தவெக நிர்வாகி மீது பாலியல் சீண்டல் மற்றும் சாதிய வன்கொடுமை புகார்
அந்த மனுவில் “கடந்த சட்டமன்ற தேர்தல் முடிந்த ஒரு மாதத்திற்கு பின் காரமடை ஒன்றிய செயலாளர் கருப்புசாமி அவசர ஆலோசனை கூட்டம் என கூறி தன்னை அழைத்ததாகவும், கூட்டம் முடிய இரவு நேரமான போது தன்னிடம் அவர் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றதாகவும், பாலியல் இச்சைக்கு உடன்படாததால் பட்டியலின சமூகத்தை சேர்ந்த தன்னை சாதி ரீதியாக இழிவுபடுத்தியும், கட்சியை விட்டு வெளியேற்றவும் தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருவதாக குற்றஞ்சாட்டி இருந்தார்.
மேலும், சமீபத்தில் தூய்மை பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சௌமியா குறித்து கேள்வி எழுப்பியதால் ஆத்திரமடைந்த மகளிரணி நிர்வாகி சபிதா மற்றும் அவரது கணவர் பாண்டி ஆகியோர் சௌமியா வீட்டுக்கே சென்று சாதி பெயரைச்சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டியதோடு,கொலை விடுத்ததாகவும், இதற்கான வீடியோ ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.




இதையும் படிக்க : கோவை நூலகங்களில் 3,808 போலி புத்தகங்கள் அகற்றம்!
மேலும், தன்னை விபத்து ஏற்படுத்தி கொல்ல ஒன்றிய செயலாளர் கருப்புசாமி திட்டமிட்டதாக கூறப்படும் வாட்ஸ் அப் ஆதாரங்களும் தன்னிடம் உள்ளதாக சௌமியா அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். பிரச்னையை மூடி மறைக்க கோரி கருப்பசாமிக்கு நெருக்கமான சரவணன் என்பவர் தன்னை தொடர்பு கொண்டு பண உதவி மற்றும் பதவி தருவதாக கூறி ஆபாசமாகவும், பாலியல் ரீதியாகவும் பேசிய ஆடியோ ஆதாரத்தையும் வெளியிட்டு இருந்தார்.
மேலும்,இதுகுறித்து மாவட்ட செயலாளர் ராஜ்குமார் மற்றும் காரமடை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை” எனவும் அந்த மனுவில் வேதனை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகராஜ் தலைமையிலான போலீசார் பெண்ணை தகாத வார்த்தையால் பேசியது,தவறாக நடக்க முயன்றது,கொலை மிரட்டல் விடுத்தது, சாதியை கூறி திட்டியது என்பது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஒன்றிய செயலாளர் கருப்பசாமி,மகளிரணி நிர்வாகி சபிதா மற்றும் அவரது கணவர் பாண்டி ஆகியோர் மீதுவழக்குப்பதிவு செய்தனர்.
போலீசார் தீவிர விசாரணை
தொடர்ந்து மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகராஜ், அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரி ஆகியோர் பாதிக்கப்பட்ட பெண் சௌமியா, அவரது தாயார் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் நவம்பர் 11, 2026 நேற்று முன்தினம் இரவு முதல் நவம்பர் 12, 2026 நேற்று மதியம் வரை தொடர்ந்து தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.
சௌமியாவுக்கு குவியும் ஆதரவு
விசாரணையின் முடிவில் இதுகுறித்து அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட உள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதனிடையே இச்சம்பவம் குறித்து அறிந்த ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் ராஜலட்சுமி, மேட்டுப்பாளையம் தாலுக்கா தலைவர் பிரியா,மாவட்ட குழு உறுப்பினர் லதா மணி,மேட்டுப்பாளையம் நகர திமுக இளைஞரணி அமைப்பாளர் கணேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை செயலாளர் கந்தசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், மக்கள் அதிகாரம், தமிழ் புலிகள் கட்சி, ஆதித்தமிழர் கட்சி, சமூக நீதி கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பாதிக்கப்பட்ட பெண் சௌமியாவை நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
இதையும் படிக்க : கதவும் உடைக்கல.. லாக்கரும் உடைக்கல.. ஆனா 50 பவுன் நகை மாயம்.. நாகர்கோவில் கூட்டுறவு வங்கியில் என்ன நடந்தது!
அப்போது,செய்தியாளர்களிடையே பேசிய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் ராஜலட்சுமி “தவெக காரமடை ஒன்றிய செயலாளர் கருப்புசாமி பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் சௌமியாவிற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் பாதிக்கப்பட்ட பெண் அவரது தாயார் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் விசாரணையின் முடிவில் குற்றவாளி கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். தண்டனை கிடைக்கும் வரை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் போராடும்.பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தங்களது ஆதரவு தொடரும்” என தெரிவித்தார்.