கிருஷ்ணகிரியில் பரபரப்பு.. பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட தொழிலாளர்கள்.. 13 பேர் மருத்துவமனையில் அனுமதி!
Krishnagiri Crime : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்லி கிடந்த உணவை சாப்பிட்ட 13 வடமாநில தொழிலாளர்கள் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 13 வட மாநில தொழிலாளர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள மந்திகிரியில் உள்ள மாவட்ட கால்நடை பண்ணை வளாகம் மற்றும் அதனை ஒட்டி உள்ள தின்னூர், அம்மன் நகர் பகுதிகளில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்கி இருந்து பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் மாட்டு தீவன தொழிற்சாலையில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருந்து பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட தொழிலாளர்கள்
இந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை ( நவம்பர் 13- ஆம் தேதி) வடமாநில தொழிலாளர்களுக்கு மதிய உணவாக சாதம், சாம்பார் மற்றும் சப்பாத்தி ஆகிய உணவுகள் வழங்கப்பட்டது. இதனை, தொழிலாளர்கள் அனைவரும் வாங்கி சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது, உணவில் பல்லி இறந்து கிடந்தது தெரியவந்தது. ஆனால், உணவை உட்கொண்ட தொழிலாளர்களில் 13 பேருக்கு சிறிது நேரத்திலேயே கடுமையான வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. இதனை கண்ட சக தொழிலாளர்கள் மற்றும் பண்ணையின் உரிமையாளர்கள் அவர்களை மீட்டு அவசர ஆம்புலன் மூலமாக ஓசூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் படிக்க: கதவும் உடைக்கல.. லாக்கரும் உடைக்கல.. ஆனா 50 பவுன் நகை மாயம்.. நாகர்கோவில் கூட்டுறவு வங்கியில் என்ன நடந்தது!
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை
அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உணவின் தரத்திலும், சுகாதாரத்திலும் காட்டப்பட்ட அலட்சியத்தின் காரணமாகவே இத்தகைய நிலை ஏற்பட்டதாக தொழிலாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. அந்த சம்பவம் தொடர்பாக அறிந்த மந்திகிரி போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். அத்துடன், உணவின் மாதிரிகளை சேகரித்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதனை ஆய்வுக்காக கொண்டு சென்றனர்.
உணவு ஓப்பந்ததாரரிடம் மந்தகிரி போலீசார் தீவிர விசாரணை
இந்த உணவை ஒப்பந்த அடிப்படையில் தினந்தோறும் சமைத்து கொடுக்கும் ஒப்பந்ததாரர் மற்றும் ஊழியர்கள் ஆகியோரிடம் மந்திகிரி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 13 தொழிலாளர்கள் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியிலும், வடமாநில தொழிலாளர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: இன்ஸ்டா ரீல்ஸ்க்காக அரிவாளை சுழற்றிய இளசுகள்.. பதிலுக்கு லத்தியை சுழற்றிய போலீசார்.. தூத்துக்குடியில் அதகளம்!