பெண்ணின் வயிற்றில் 5 செ.மீ ஊசியை வைத்து தைத்த மருத்துவர் – உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
Madras High Court Medical Negligence Case : குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சைக்காக சென்ற பெண்ணின் வயிற்றுக்குள் 5 செ.மீ நீளமுள்ள அறுவை சிகிச்சை ஊசியை வைத்து தைத்த சம்பவம் பெரும் சர்ச்சையானது இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதி முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளார்.
சென்னை, நவம்பர் 13 : குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சைக்காக சென்ற பெண்ணின் வயிற்றுக்குள் 5 செ.மீ நீளமுள்ள அறுவை சிகிச்சை ஊசியை வைத்து தைத்த சம்பவம் பெரும் சர்ச்சையானது. இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், மாநகராட்சி மருத்துவமனையில் (Hospital) மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் அலட்சியத்தை ஒருபோதும் புறக்கணிக்க முடியாது. இந்த சம்பவம் குறித்து விசாரணை அவசியம் என நீதிபதி தெரிவித்தார்.
பெண்ணின் வயிற்றில் 5 செ.மீ ஊசியை வைத்து தைத்த மருத்துவர்
சென்னை அயனாவரத்தை மோகன் என்பவரது மனைவி சங்கீதா. இவருக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அயனாவரம் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் 2வது பிரசவத்தின்போது சிசேரியன் முறையில் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து அவருக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அப்போது அறுவை சிகிச்சை ஊசி அவரது வயிற்றுக்குள் தவறுதலாக வைத்து தைக்கப்பட்டது.
இதையும் படிக்க : திமுகவுக்கு மேலும் ஒரு நெருக்கடி.. நெடுஞ்சாலை துறையில் ரூ.2200 கோடி ஊழல்.. எ.வ.வேலு தலையில் இடியை இறக்கிய ஆதவ் அர்ஜூனா!




இதனையடுத்து அவருக்கு தொடர்ந்து வயிற்றுவலி, மாதவிடாய் ரத்தப்போக்கு உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையாத நிலையில், 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, அவரது வயிற்றுக்குள் சுமார் 5 செ.மீ. நீளமுள்ள அறுவை சிகிச்சை ஊசி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அறுவை சிகிச்சை மூலம் அந்த ஊசி அகற்றப்பட்டது.
இதுதொடர்பாக அறுவை சிகிச்சை செய்த பெண் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சங்கீதா அளித்த புகார் மீது மருத்துவ கவுன்சில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நவம்பர் 13, 2026 இன்று விசாரணைக்கு வந்த நிலையில் , தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு 12 ஆண்டுகளுக்கு பிறகே மனுதாரர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அதுவரை கடுமையான வலியால் அவதிப்பட்டதாகக் கூறும் அவர் சட்டரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று தெரிவித்தார்.
இதனையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரர் தினக்கூலித் தொழிலாளியின் மனைவி. இதனால், பொருளாதார வசதியின்மை காரணமாக வலியைப் பொறுத்துக் கொண்டிருக்கலாம். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை குறிப்புகளில் அவரது வயிற்றில் ஊசி இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் அலட்சியத்தை ஒருபோதும் புறக்கணிக்க முடியாது. இந்த சம்பவம் குறித்து விசாரணை அவசியம்.
இதையும் படிக்க : காக்கிச் சட்டை கனவு நனவாகிறது.. தமிழக காவல்துறையில் 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப உத்தரவு.. முதல்வர் விஜய் அறிவிப்பு!
எனவே, தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் சம்பந்தப்பட்ட பெண் மருத்துவர் மற்றும் மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்பி, இருதரப்பினரையும் விசாரித்து, மனுதாரரின் மருத்துவ ஆவணங்கள் மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் அறிக்கையைப் பரிசீலித்து 2 மாதங்களுக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.