கண்ணிமைக்கும் நேரத்தில் சோகம்.. கோவையில் 3 மாணவிகள் மீது பாய்ந்த டிப்பர் லாரி.. ஒரு மாணவி கொடூர பலி!
Coimbatore Lorry Accident Student Dies : கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிவேகமாக வந்த டிப்பர் லாரி மோதியதில், நர்சிங் மாணவி ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இரு மாணவிகள் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் அனுஸ்ரீ ( 21 வயது). இவர் கோவை மாவட்டம், சுந்தரபுரத்தில் செயல்பட்டு வரும் அபிராமி செவிலியர் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் 2- ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், இன்று பிற்பகல் சுமார் ஒன்றரை மணி அளவில் மாணவி அனு ஸ்ரீ மதிய உணவு சாப்பிடுவதற்காக விடுதிக்கு சென்றார். அங்கு, உணவு அருந்திவிட்டு சக மாணவிகளான தேவிகா ( 21 வயது) மற்றும் ஸ்ரீதரணி ( 21 வயது) ஆகியோருடன் கல்லூரிக்கு திரும்பி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, கல்லூரி எதிரே உள்ள எல் அண்ட் டி பைபாஸ் சாலையை மாணவிகள் மூன்று பேரும் கடக்க முயன்றவர். அப்போது, கொச்சினில் இருந்து சேலம் நோக்கி தவறான பாதையில் அதிவேகமாக டிப்பர் லாரி ஒன்று வந்தது. இதில், எதிர்பாராத விதமாக அந்த டிப்பர் லாரி மாணவிகள் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், அனு ஸ்ரீ மீது டிப்பர் லாரியின் சக்கரங்கள் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் அனுஸ்ரீ சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஒரு மாணவி பலி- இரு மாணவிகள் பலத்த காயம்
மற்றொரு மாணவியான தேவிகா வலது தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்தார். இதே போல, ஸ்ரீ தரணியும் பலத்த காயமடைந்தார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்தனர். இது தொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தேவிகா மற்றும் ஸ்ரீதரணி ஆகியோரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க: தூத்துக்குடி லாக்அப் டெத் சம்பவம்? சிசிடிவி ஆதாரத்துடன் காவல் துறை அதிரடி விளக்கம்.. முழு விவரம் என்ன!




டிப்பர் லாரி ஓட்டுர் மீது வழக்கு- போலீசார் விசாரணை
விபத்தில் சிக்கி உயிரிழந்த அனுஸ்ரீ-யின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக அதை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரியின் ஓட்டுநர் தப்பியோட முயன்ற நிலையில் அவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக, கிடைத்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து டிப்பர் லாரி ஓட்டுனரான கோவை மாவட்டத்தை சேர்ந்த பால்ராஜ் ( 40 வயது) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு
கல்லூரி மாணவி சாலை விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், போலீசார் லாரியை பறிமுதல் செய்து போக்குவரத்தை சீரமைத்தனர்.
மேலும் படிக்க: கணவர் சித்ரவதை.. வீடியோ வெளியிட்டு பெண் ஐடி ஊழியர் தற்கொலை.. பூந்தமல்லியில் பெருஞ்சோகம்!