மனுவோடு வாங்க.. பணத்தோடு வராதீங்க.. மானாமதுரையில் இப்படியொரு வட்டாட்சியரா? சமூகவலைதளங்களில் வைரலாக பரவும் நோட்டீஸ்!
Manamadurai Taluk office Notice: சிவகங்கை மாவட்டத்தில் லஞ்சத்துக்கு எதிராக மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஓட்டப்பட்ட நோட்டீஸ் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வைரல் நோட்டீசில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸுக்கு உத்தரவளித்த வட்டாட்சியர் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் வட்டாட்சியர் உத்தரவிட்டதாக கூறி நோட்டீஸ் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் தான் தற்போது வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பேசும் பொருளாகி உள்ளது. ஏனென்றால், அந்த நோட்டீசில் “வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களுடன் மட்டுமே வர வேண்டும், பணம் வைத்திருப்பவர்களுக்கு உள்ளே அனுமதி இல்லை” என்ற வாசகம் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக அரசு அலுவலகங்களில் பட்டா மாறுதல், சான்றிதழ் பெறுதல், நில அளவை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வரும் பொது மக்களிடம் சிலர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் லஞ்சம் எதிர்பார்ப்பதாகவும், இடைத்தரகர்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன.
அரசு பணிகளில் வெளிப்படைத் தன்மை
இதனை தடுக்கும் விதமாகவும், அரசு பணிகளில் வெளிப்படுத்தன்மையே உறுதி செய்யும் வகையிலும் இந்த வினோதமான கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளதாக மானாமதுரை வட்டாட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ள இந்த நோட்டீஸ் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. லஞ்சத்துக்கு எதிராக வட்டாட்சியர் எடுத்துள்ள இந்த துணிச்சலான நடவடிக்கை பாராட்டுக்குரியது என்று பலதரப்பட்ட மக்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், சாமானிய மக்களுக்கு அரசு நிர்வாகத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: ரூ.5 ஆயிரம் லஞ்சம்.. லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கிய சிறப்பு எஸ்ஐ.. திருப்பத்தூரில் சம்பவம்!




ஊழல் – லஞ்சத்துக்கு எதிரான நடவடிக்கை
அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் சோதனைகள் ஒருபுறம் நடந்து வந்தாலும், தாலுகா அலுவலகத்தில் இப்படி ஒரு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது அந்த பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் ஊழல் மற்றும் லஞ்சத்துக்கு எதிராக தமிழக அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

லஞ்சத்துக்கு எதிரான நோட்டீஸ்
சிவகங்கையில் இப்படியொரு வட்டாட்சியரா
இதில், கணக்கில் வராத பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுவாகவே பொதுமக்கள் மத்தியில் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என்றால் லஞ்சம் கொடுத்து தான் தங்களது தேவைகள் மற்றும் கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்து வருகிறது. தற்போது, அந்த எண்ணத்திற்கு மாற்றாக மானாமதுரை வட்டாட்சியர் எடுத்துள்ள வினோதமான நடவடிக்கை ஒரு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. அத்துடன் சிவகங்கையில் இப்படியொரு வட்டாட்சியரா என்று கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும் படிக்க: காரைக்குடி மாநகராட்சியில் பரபரப்பு.. லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கிய பில் கலெக்டர்!