தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் மழை, மீனவர்களுக்கு எச்சரிக்கை – வானிலை மையம் அலர்ட்!
தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 5, 2026 இன்று 9 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை, ஆகஸ்ட் 5 : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 5, 2026 இன்று 9 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடதமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 5, 2026 இன்று திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருச்சி மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
9 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தெற்கு உள் கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 5.8 கி.மீ. உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதுதவிர, இலங்கையின் தென்மேற்கு பகுதிகள் மற்றும் அதையொட்டிய பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
இதையும் படிக்க : சென்னை கூவத்தில் படகு சவாரி.. சுத்தப்படுத்த சர்வதேச டெண்டர்.. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்!




இதன் காரணமாக ஆகஸ்ட் 5, 2026 இன்று திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், ஆகஸ்ட் 6, 7, 2026 ஆகிய 2 நாட்கள், தேனி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், வட தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.
அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 10, 2026 ஆகிய 3 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
இதையும் படிக்க : கால்நடை காப்போம் திட்டத்திற்கு ரூ.31 கோடி ஒதுக்கீடு… அமைச்சர் சூப்பர் அறிவிப்பு!
மீனவர்களுக்கான எச்சரிக்கை
குமரிக் கடலின் சில பகுதி, தெற்கு வங்கக் கடலின் தென் பகுதி மற்றும் தெற்கு அந்தமான் கடலின் சில பகுதி, தென்மேற்கு வங்கக் கடலின் அநேக பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் ஆகஸ்ட் 8, 2026 சனிக்கிழமை வரை பலத்த சூறாவாளி காற்று வீசக்கூடும். இதுதவிர, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்திய கிழக்கு பகுதி, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆகஸ்ட் 8, 2026 தேதி வரை பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மேற்படி தேதிகள் வரை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.