“ரோபோ மோதி தமிழக இளைஞர் பரிதாப பலி!”.. தென்கொரியாவில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!!
Robot Crash South Korea: தென்கொரியாவில் கார் உதிரிபாகத் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுதர்சன் என்ற இளைஞர், எதிர்பாராத விதமாக ரோபோ மோதிய விபத்தில் உயிரிழந்தார். அண்மையில்தான் இவருக்குத் திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்த நிலையில், இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. அவரது உடலை தாய்நாடு கொண்டுவர உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர், செப்.23: சொந்த ஊரில் போதிய வேலைவாய்ப்புகள் இல்லாத சூழலிலும், குடும்பத்தின் வறுமையைப் போக்கிப் பொருளாதார நிலையை உயர்த்தவும் பல இந்திய இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று கடினமாக உழைத்து வருகின்றனர். அவ்வாறு வெளிநாடுகளில் வியர்வை சிந்தி உழைக்கும் இளைஞர்களின் வாழ்க்கை, சில நேரங்களில் எதிர்பாராத விபத்துகளால் பெரும் சோகத்தில் முடிந்துவிடுகிறது. அந்த வகையில், தென்கொரியாவில் உள்ள முன்னணித் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பணி நேரத்தில் எதிர்பாராத விதமாகத் தானியங்கி ரோபோ மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில்தான் இவருக்குத் திருமணம் நிச்சயக்கப்பட்டு, இன்னும் சில வாரங்களில் திருமணம் நடைபெறவிருந்த சூழலில் இந்த கொடூர விபத்து நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் அவரது பெற்றோர், குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களை ஆறாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிக்க: ஜெம் கிராணைட் வீரமணிக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை… திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி விளக்கம்
தொழிற்சாலையில் நிகழ்ந்த கோர விபத்து:
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள கண்ணுகுடி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவரது 33 வயது மகனான சுதர்சன், கடந்த மூன்று ஆண்டுகளாகத் தென்கொரியாவின் சியோரா நகரில் அமைந்துள்ள கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். வழக்கம்போல தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கிருந்த தானியங்கி ரோபோ இயந்திரம் எதிர்பாராதவிதமாக சுதர்சனின் மார்புப் பகுதியில் பலமாக மோதியுள்ளது. இதனால் படுகாயமடைந்து சரிந்த அவரை, சக ஊழியர்கள் உடனடியாக மீட்டுத் தொழிற்சாலையில் இருந்த மருத்துவரிடம் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். எனினும், அவரைப் பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
திருமணக் கனவுகள் கலைந்த சோகம்:
சுதர்சன் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் தென்கொரியாவில் இருந்து விடுமுறையில் தனது சொந்த ஊரான கண்ணுகுடிக்கு வந்திருந்தார். அப்போது அவரது பெற்றோர் அவருக்குப் பெண் பார்த்து, கடந்த வாரம் வெகுவிமர்சையாகத் திருமண நிச்சயதார்த்தத்தையும் செய்து முடித்திருந்தனர். விரைவில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், பணி நிமித்தமாக மீண்டும் தென்கொரியாவுக்குச் சென்ற சில நாட்களிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. மகனின் திருமணக் கோலத்தைப் பார்க்க வேண்டிய நேரத்தில், அவனது மரணச் செய்தியைக் கேட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறித் துடித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அவதூறு வழக்கு… நீதிமன்றத்தில் மு.க. ஸ்டாலின் கொடுத்த பதிலடி.. முழு விவரம்!
உடலை தாயகம் கொண்டுவர தீவிர முயற்சி:
சுதர்சனின் எதிர்பாராத மறைவால் அவரது குடும்பத்தினர் சொல்லொணாத் துயரத்திலும் தீவிர மன உளைச்சலிலும் சிக்கித் தவித்து வருகின்றனர். இதனிடையே, தென்கொரியத் தலைநகர் சியோலில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் தென்கொரியத் தமிழ்ச் சங்கத்தின் உதவியுடன் சுதர்சனின் உடலை விரைவாகத் தாயகத்திற்குக் கொண்டுவரத் தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேவேளையில், சுதர்சனின் உடலைத் தென்கொரியாவில் இருந்து சொந்த ஊருக்கு விரைவாகக் கொண்டுவர மத்திய மற்றும் மாநில அரசுகள் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினரும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.