சென்னை கூவத்தில் படகு சவாரி.. சுத்தப்படுத்த சர்வதேச டெண்டர்.. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்!
Tamil Nadu Budget Cooum Adyar River Boat Ride: 2026-27 த.வெ.க பட்ஜெட்டில் சென்னை கூவம் மற்றும் அடையாறு நதிகளைச் தூய்மைப்படுத்தி, படகு சவாரி வசதி செய்ய சர்வதேச டெண்டர் கோரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.21,524 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஆகஸ்ட் 05: தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) அரசின் 2026–2027ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், சென்னை பெருநகரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் நகர்ப்புற பகுதிகளை உலகத் தரத்திற்கு உயர்த்தும் வகையில் ‘முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்’ அறிவிக்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள இப் புதிய பெருந்திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில் ரூ. 2,117 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: Tamil Nadu Budget 2026 LIVE Updates: பட்ஜெட்டை தாக்கல் செய்யும் அமைச்சர்.. அறிவிப்புகள் விவரம்!
நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்:
2031-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் நகரங்கள் எவ்வாறு இயங்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ் முக்கிய அம்சங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. அதன்படி, குடிநீர் வழங்கல் மற்றும் நிலத்தடி கழிவுநீர் வடிகால் அமைப்பு, ஒருங்கிணைந்த திடக் கழிவு மேலாண்மை, நகர்ப்புற நீர்நிலைகளின் பாதுகாப்பு மற்றும் பசுமைப் பரப்பு விரிவாக்கம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த மின்-ஆளுமை மற்றும் பொது சுகாதார மேம்பாடு ஆகிய திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
கூவம், அடையாறு சீரமைப்புக்குச் ‘சர்வதேச டெண்டர்’:
வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னை நகரத்தின் குடிநீர் ஆதாரங்களாக இருந்த கூவம் மற்றும் அடையாறு ஆறுகள் கழிவுநீர் நதிகளாக மாறியிருப்பது வேதனையளிப்பதாகத் தெரிவித்த நிதி அமைச்சர், அதை மீட்டெடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும் என்றார். தென்கொரியாவின் சியோல் நகரில் உள்ள ‘செங்ஜியான்’ நதி மற்றும் சிங்கப்பூரின் ‘கலாங்’ நதி ஆகியவை மறுசீரமைக்கப்பட்டு உலக அளவில் புகழ்பெற்ற அடையாளங்களாக மாறியதைப் போல கூவமும் அடையாறும் மாற்றப்படும்.
கூவம் மற்றும் அடையாறு ஆறுகளைச் சிங்கப்பூர், சியோல் நதிகளின் பாணியில் சென்னையின் பெருமைமிகு அடையாளமாக மாற்றச் சர்வதேச அளவில் டெண்டர் கோரப்படும். இத்திட்டத்திற்கான விரைவு சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் விரிவான திட்ட அறிக்கை உடனே தயார் செய்யப்படும். கூவம் மற்றும் அடையாற்றில் பொதுமக்கள் படகு சவாரி செய்வதையும், நதிக்கரைகளில் உடற்பயிற்சி கூடம், நடைபாதை மற்றும் தூய்மையான காற்றை சுவாசிக்கும் சூழலையும் த.வெ.க அரசு உறுதி செய்யும் என்றார்.
ரூ.3,108 கோடியில் ‘ரிங் மெயின்’ குடிநீர் திட்டம்:
சென்னை மாநகரம் முழுமைக்கும் தடையற்ற மற்றும் சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில், சென்னையின் அனைத்து முக்கியக் குடிநீர் ஆதாரங்களையும், குடிநீர் விநியோக நிலையங்களுடன் இணைக்கும் ‘ரிங் மெயின் பைப்லைன் சிஸ்டம்’ திட்டம் ரூ. 3,108 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. 2030–31 ஆம் ஆண்டுக்குள் இத்திட்டம் முழுமையாக நிறைவடையும் போது சென்னை மாநகரம் முழுவதும் அனைத்துப் பகுதிகளுக்கும் சமமான மற்றும் சீரான குடிநீர் விநியோகம் உறுதி செய்யப்படும்.
20 இடங்களில் ‘ஸ்மார்ட் பார்க்கிங்’:
நுண்ணறிவுப் போக்குவரத்து மேலாண்மை: சென்னை பெருநகர மாநகராட்சி, சென்னை காவல்துறை மற்றும் போக்குவரத்து கழகத்துடன் இணைந்து நுண்ணறிவுப் போக்குவரத்து மேலாண்மை அமைப்பை இறுதி கட்டத்தில் செயல்படுத்தி வருகிறது. வாகன நெரிசலைக் குறைக்க சென்னையின் முக்கிய 20 இடங்களில் ‘ஸ்மார்ட் பார்க்கிங் மேலாண்மை’ அமைக்கப்படும். அம்பத்தூர் மற்றும் கிண்டி தொழில்துறை எஸ்டேட்டுகளின் (Industrial Estates) உட்புறச் சாலைகள் முற்றிலும் புனரமைக்கப்படும்.
வெள்ளத் தடுப்பு, பசுமை சென்னை & நவீன வீதிகள்:
சென்னையில் வெள்ள பாதிப்புகளைத் தடுக்க முக்கிய நீர்வழித் தடங்களின் கொள்ளளவை அதிகரிக்கும் வகையில், வெள்ளத் தடுப்புச் சுவர்களின் உயரம் உயர்த்தப்பட்டு சங்கிலி இணைப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. குடியிருப்பு பகுதிகள், முக்கிய வழித்தடங்கள் மற்றும் நடைபாதைகள் அழகுபடுத்தப்பட்டுப் பசுமையாக்கப்படும்.
இதையும் படிக்க: Tamil Nadu Budget 2026 Update: ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டம்.. பட்ஜெட்டில் வந்தது அதிரடி அறிவிப்பு!!
நடைபாதைகள், மிதிவண்டிகளுக்கான தனிப் பாதைகள், மேம்படுத்தப்பட்ட சாலைச் சந்திப்புகள், பள்ளிகளுக்குப் பாதுகாப்பாகச் செல்லும் பாதைகள் மற்றும் நவீன எல்.இ.டி தெருவிளக்குகளுடன் கூடிய நவீன நகர்ப்புற வீதிகளாகச் சென்னை வீதிகள் மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.