Tamil Nadu Budget 2026 Update: ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டம்.. பட்ஜெட்டில் வந்தது அதிரடி அறிவிப்பு!!
Tamil Nadu Budget Thai Maman Thanga Mothiram Scheme allocation: முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசின் முதல் பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில் தவெக-வின் முதன்மை வாக்குறுதியான 'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டத்திற்கு ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, ஆகஸ்ட் 05: தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, 2026–2027ஆம் நிதியாண்டிற்கான அரசின் முதல் முழுமையான திருந்திய நிதிநிலை அறிக்கையை நிதித் துறை அமைச்சர் என். மரிய வில்சன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். காலை 10 மணிக்குத் தொடங்கிய கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கையை வாசித்த அமைச்சர் மரிய வில்சன், த.வெ.க தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகளையும் நிதி ஒதுக்கீடுகளையும் வெளியிட்டார்.
மேலும் படிக்க: “தாத்தாவின் சொத்துக்குப் பேரன் உரிமை கொண்டாடலாம்… தமிழ்நாட்டிற்கு அல்ல!”.. உதயநிதியை விமர்சித்த அமைச்சர் செங்கோட்டையன்!!
‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டம்:
அதன் முக்கிய அங்கமாக, மாநிலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்காக ரூ. 560 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக பேரவையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பெண்களின் நலன் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு இத்திட்டம் த.வெ.க அரசால் முன்னெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தவெக தேர்தல் வாக்குறுதி:
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும், குழந்தையின் பிறப்பைக் கொண்டாடும் வகையிலும், தாய்மையின் இன்பத்தையும் முக்கியத்துவத்தையும் போற்றும் வகையிலும் தாய்மாமனின் அன்பளிப்பாக 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என தவெகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.