“தாத்தாவின் சொத்துக்குப் பேரன் உரிமை கொண்டாடலாம்… தமிழ்நாட்டிற்கு அல்ல!”.. உதயநிதியை விமர்சித்த அமைச்சர் செங்கோட்டையன்!!
தமிழக வெற்றி பெற்ற கழகத்தின் கலந்தாய்வுக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், திமுகவின் வாரிசு அரசியலையும், பெண்களைப் பற்றிய அவர்களின் பேச்சுகளையும் கடுமையாகச் சாடிப் பேசியுள்ளார். அதோடு, தவெக கூட்டத்தில் திமுகவின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசியது குறித்து முழுமையாக அறியலாம்.
சென்னை, ஆகஸ்ட் 05: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற முக்கியக் கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய மூத்த அரசியல் தலைவரும் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன், திமுக மற்றும் அதன் தலைமைகளின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். திமுகவினர் பயத்தினால் தூக்கமின்றித் தவித்து வருவதாகத் தெரிவித்த அவர், தமிழகத்தை இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக மாற்ற தவெக அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க : உதயநிதி ஆபாசமாக பேசவில்லை தவெகவுக்கு விழுந்த அடி – மு.க.ஸ்டாலின் கண்டனம்
“திமுக எனும் தீய சக்தி”
கூட்டத்தில் காரசாரமாக உரையாற்றிய அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களும் தங்களின் வாழ்நாள் முழுவதும் “திமுக என்ற தீய சக்தியை அழிக்கும் வரை ஓயப்போவதில்லை” என்ற கொள்கையோடு செயல்பட்டதை நினைவு கூர்ந்தார்.
அதே தீய சக்தியோடு கைகோர்த்து ஆட்சியைப் பிடிக்கத் துடிப்பவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரே தலைவராகத் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் உருவெடுத்துள்ளார் என்றும், 1967-க்குப் பிறகு தமிழ்நாட்டு அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கிக் காட்டிய வரலாறு தவெக தலைவரையே சாரும் என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
“திமுகவின் வாடிக்கையே அது தான்”
திமுக தலைவர்கள் மற்றும் அமைச்சர்களின் பேச்சுக்களைக் கடுமையாகச் சாடிய அவர், பெண்களைப் பற்றித் தொடர்ந்து இழிவாகப் பேசுவதையும், வார்த்தைகளை அளந்து பேசாமல் தகுதியின்றிச் செயல்படுவதையும் திமுகவினர் வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்று குற்றம் சாட்டினார்.
முன்னாள் அமைச்சர் பொன்முடி முதல் பல திமுக தலைவர்கள் வரை பெண்களைக் கேவலப்படுத்திப் பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளதை இந்த நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது என்றும் அவர் சாடினார். தவெகவின் வளர்ச்சியையும், மக்களிடையே அதற்கு இருக்கும் ஆதரவையும் கண்டு பயந்துபோய், தூக்கமின்றித் தவிக்கும் திமுகவினர், என்ன பேசுவதென்று தெரியாமல் புலம்பி வருவதாகக் கேலி செய்தார்.
வாரிசு அரசியலுக்குச் சம்மட்டி அடி:
திமுகவில் நிலவும் வாரிசு ஆதிக்கம் குறித்து மிகக் கடுமையான மொழியில் விமர்சித்த செங்கோட்டையன், “தன்னுடைய தந்தைக்குப் பிறகுதான் ஆட்சிக்கு வரலாம் என்று சிலர் கனவு கண்டார்கள். தாத்தாவின் சொத்து மீது பேரனுக்கு ஆசையோ உரிமையோ இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் தான் தீர்மானிப்பார்களே தவிர, வாரிசு அரசியல் அதிகாரத்தால் எவராலும் முடிவெடுக்க முடியாது. மீண்டும் தாத்தாவைப் போல வரலாம் என்ற அவர்களின் ஆசைக்கனவு ஒருபோதும் பலிக்காது” என்று மிக ஆவேசமாகத் தெரிவித்தார்.
இதையும் படிக்க : தவெக எம்எல்ஏ மீதும் நடவடிக்கை தேவை, எந்த கட்சியாக இருந்தாலும் நடவடிக்கை தேவை – பெ.சண்முகம் பரபரப்பு கருத்து
இந்திய வரலாற்றிலேயே தமிழகத்தை ஒரு முன்னோடி மாநிலமாகவும், அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டும் மாபெரும் சக்தியாகவும் மாற்ற வேண்டும் என்பதே தவெக தலைவரின் முதன்மை ஆசையாகும். நாளைக்கே தேர்தல் வைத்தால் கூட 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று தவெக தான் ஆட்சியமைக்கும் என்றும், நமது தலைவர் இருக்கும் வரை அவர் முதலமைச்சர் நாற்காலியில் அமர்வதை எந்தவொரு கொம்பனாலும் தடுக்க முடியாது என்றும் கூறினார்.