Tamil Nadu Budget: திருமணத்திற்கு 8 கிராம் தங்கம் & பட்டுப் புடவை.. ‘அண்ணனின் சீர்’.. பட்ஜெட்டில் மகளிருக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பு!!!
Tamil Nadu Budget 8 Gram Gold Coin scheme allocation: த.வெ.க அரசால் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப் புடவை வழங்கும் திட்டத்திற்கு ரூ.812 கோடியும், காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்திற்கு ரூ.710 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, ஆகஸ்ட் 05: முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் நிதிநிலை அறிக்கையில் மகளிர் நலன், பள்ளி மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான பல்வேறு சிறப்புச் சலுகைகளும் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. நிதி அமைச்சர் என். மரிய வில்சன் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில், பெண்களின் திருமணம் மற்றும் மாணவர்களின் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலான முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
இதையும் படிக்க: Tamil Nadu Budget 2026 LIVE Updates: பட்ஜெட்டை தாக்கல் செய்யும் அமைச்சர்.. அறிவிப்புகள் விவரம்!
திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப் புடவை:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் அண்ணனாகவும் தம்பியாகவும் இருந்து முதலமைச்சர் உறுதுணையாக நிற்பதாகத் தெரிவித்த நிதி அமைச்சர், திருமணத்தை மேலும் மகிழ்ச்சியாக்கும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் அனைவருக்கும் அவர்களின் திருமண நாளன்று அரசின் சார்பில் 8 கிராம் தங்க நாணயமும் (1 சவரன்) மற்றும் ஒரு பட்டுப் புடவையும் ‘அண்ணனின் சீராக’ வழங்கப்படும். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக திருத்திய வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ. 812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்:
கல்விப் புரட்சி தந்த பெருந்தலைவர் காமராஜரின் பெயரில் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
6 முதல் 8-ஆம் வகுப்பு வரை விரிவாக்கம்: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் நாள் முதல் இத்திட்டம் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் கூடுதலாக 15,414 பள்ளிகளைச் சேர்ந்த 15.14 லட்சம் மாணவர்கள் பயனடைவர். இத்திட்டத்திற்காக ரூ. 710 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்கான சிறப்பு வசதிகள்:
முதியோரின் கண்ணியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை உறுதி செய்யும் வகையில், முதற்கட்டமாக 12 மாவட்டங்களில் 12 நவீன முதியோர் இல்லங்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு இல்லத்திலும் 40 பயனாளிகள் தங்கும் வசதி மற்றும் மருத்துவப் பராமரிப்பாளர்கள் நியமிக்கப்படுவர். இதற்காக ரூ. 6.66 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: Tamil Nadu Budget 2026 Update: ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டம்.. பட்ஜெட்டில் வந்தது அதிரடி அறிவிப்பு!!
பொழுதுபோக்கு மையங்கள்: யோகா, தியான வகுப்புகள், நூலகம் மற்றும் உள்விளையாட்டு வசதிகளுடன் கூடிய மூத்த குடிமக்கள் பொழுதுபோக்கு மையங்கள் முதற்கட்டமாக 5 மாவட்டங்களில் உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.