தூத்துக்குடி போலீஸுக்கு கிடைத்த ரகசிய தகவல்.. குடோனிலிருந்து 462 கிலோ புகையிலை பறிமுதல்.. 3 பேரை தூக்கிய அதிரடிப்படை!
Thoothukudi Tobacco Seized : தூத்துக்குடி மாவட்டத்தில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 462 கிலோ புகையிலைப் பொருள்கள் மற்றும் ரூ. 14 லட்சத்தை போதைப்பாெருள் தடுப்பு அதிரடிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில், 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 462 கிலோ கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில், தொடர்புடைய 3 பேரை கைது செய்தனர். தமிழகத்தில் போதை பொருள்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் போதைப்பொருள் தடுப்பு அதிரடிப்படை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில், போதைப்பொருள் கடத்தல், விற்பனையில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளர் முத்துராஜ் தலைமையிலான போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அதில், போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
குடோனில் இருந்த 462 கிலோ புகையிலை பறிமுதல்
அந்த தகவலின் அடிப்படையில், தூத்துக்குடி தெற்கு காவல் ஆய்வாளர் ஷேக் அப்துல் காதர் தலைமையிலான போலீசார் புது காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள குடோனில் சோதனை மேற்கொண்டனர். இதில், புதுக்கோட்டை குலையன் கரிசல் பகுதியை சேர்ந்த தங்கப்பன் மகன் மாரி ராமன், பன்னீர்செல்வம் மகன் ராஜ்குமார், கல்யாணசுந்தரம் மகன் ராமசுப்பு ஆகியோர் என்பதும், அவர்கள் விற்பனைக்காக புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.
மேலும் படிக்க: ஆட்சியருக்கு ஆபாச மெசெஜ் அனுப்பிய விவகாரம்.. துப்பாக்கியால் சுட்டு தள்ளியிருப்பேன்.. பொங்கியெழுந்த ஜெயக்குமார்!




ரூ. 14 லட்சம் – வாகனங்கள் பறிமுதல்- 3 பேர் கைது
இதைத் தொடர்ந்து, அவர்களை கைது செய்த போலீசார் 462 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அத்துடன், அந்த மூவரிடம் இருந்து ரூ. 14 லட்சம் ரொக்கம் மற்றும் பைக் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தெற்கு காவல் நிலைய வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, கடந்த 2025- ஆம் ஆண்டு புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாக 439 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 471 பேர் கைது செய்யப்பட்டனர்.
புகையிலை பதுக்கிய கடைகள் சீல் வைப்பு
அவர்களிடம் இருந்து சுமார் 3000 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் 27 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன், புகையிலை பொருட்கள் விற்பனை செய்த மற்றும் பதுக்கி வைத்திருந்த 109 கடைகள் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டன. 2026- இல் 459 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 496 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 7612 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: கன்னியாகுமரியில் களமிறங்கிய அதிநவீன படகு.. ஒரே நேரத்தில் 150 பேர் பயணம்.. முழு விவரம் உள்ளே!