தமிழகத்தில் மழை தொடரும்… ஜூலை 3 முதல் சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
Tamil Nadu Weather: தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஜூலை 3 மற்றும் 4-ஆம் தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், தேனி மற்றும் கன்னியாகுமரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை உள்ளிட்ட வட தமிழக பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாட்களும் மழைக்கு சாதகமான வானிலை நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது மகாராஷ்டிரா முதல் வடக்கு கேரளா வரை காற்றழுத்த தாழ்வு பாதை நீடித்து வருகிறது. இதனுடன், வடக்கு வங்கக்கடல் மற்றும் வங்கதேசத்தை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி உருவாகியுள்ளது. இந்த அமைப்புகளின் தாக்கத்தால் வடமேற்கு வங்கக்கடலில் ஜூலை 3-ஆம் தேதியளவில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சூழல் உருவாகியுள்ளது.
அடுத்த மூன்று நாட்களுக்கு இடியுடன் மழை தொடரும்
ஜூன் 30 முதல் ஜூலை 2 வரை வட தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இதேபோன்ற வானிலை நீடிக்கும். தென் தமிழகத்தின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மழையுடன் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜூலை 3 மற்றும் 4-ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
ஜூலை 3-ஆம் தேதி நீலகிரி, தேனி மற்றும் கோயம்புத்தூர் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். அதேபோல் ஜூலை 4-ஆம் தேதி நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூர் மலைப்பகுதிகளில் கனமழை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். ஜூலை 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வடக்கு உள் தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழை நீடிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலையில் பெரிய மாற்றம் இல்லை
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைந்திருந்தாலும், பெரும்பாலான பகுதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை. கடலூரில் அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. சமவெளிப் பகுதிகளில் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் 22 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலையும், மலைப்பகுதிகளில் கொடைக்கானலில் 12.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. வரும் ஜூலை 4 வரை மாநிலம் முழுவதும் வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏற்படாது என்றும், இயல்பான அளவிலேயே தொடரும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Also Read: மழைக்காலப் பயணம்: பாதுகாப்பான வாகன இயக்கத்திற்கான 10 முக்கிய வழி
சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 39 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸ் வரையும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வெப்பமும் ஈரப்பதமும் நீடிக்கும் நிலையில், மழை காரணமாக சில இடங்களில் தற்காலிக குளிர்ச்சி ஏற்படக்கூடும்.