நடிகைக்கு சல்யூட் அடித்த முதல்வர் விஜய்.. சகிக்க முடியவில்லை – உதயநிதியை தொடர்ந்து முரசொலியில் விமர்சனம்..
“சுதந்திர தினத்தன்று கொடியேற்றிய முதலமைச்சர் விஜய்யின் மானம் காற்றில் பறந்தது. வெட்கமோ, கூச்சமோ இல்லாமல் ஒரு நடிகையை முன்வரிசையில் உட்கார வைத்து, இருவரும் மாறி மாறி சல்யூட் வைத்துள்ள காட்சியை அவருக்கு வாக்களித்தவர்களாலேயே சகிக்க முடியவில்லை. அசிங்கத்தையும் அருவருப்பையும் பட்டவர்த்தனமாகச் செய்வதன் மூலமாக அதனை நியாயப்படுத்த நினைப்பவர்தான் இன்று தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராக வந்துள்ளார்” என கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 18, 2026: சுதந்திர தின விழா நிகழ்ச்சியின்போது நடிகை த்ரிஷா முதல் வரிசையில் அமர்ந்திருந்ததும், அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை நோக்கி அவர் சல்யூட் அடித்ததும், அதற்குப் பதிலாக விஜய் சல்யூட் அடித்தது போன்ற புகைப்படங்கள் மற்றும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின. இதனைத் தொடர்ந்து, திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘முரசொலி’யில் விஜய்யை கடுமையாக விமர்சித்து தலையங்கம் வெளியிடப்பட்டுள்ளது.
நடிகைக்கு சல்யூட் அடித்த முதல்வர் – வாக்களர்களுக்கே சகிக்க முடியவில்லை:
அதில், “சுதந்திர தினத்தன்று கொடியேற்றிய முதலமைச்சர் விஜய்யின் மானம் காற்றில் பறந்தது. வெட்கமோ, கூச்சமோ இல்லாமல் ஒரு நடிகையை முன்வரிசையில் உட்கார வைத்து, இருவரும் மாறி மாறி சல்யூட் வைத்துள்ள காட்சியை அவருக்கு வாக்களித்தவர்களாலேயே சகிக்க முடியவில்லை. அசிங்கத்தையும் அருவருப்பையும் பட்டவர்த்தனமாகச் செய்வதன் மூலமாக அதனை நியாயப்படுத்த நினைப்பவர்தான் இன்று தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராக வந்துள்ளார்” என கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
மேலும், “மூன்றே மாதங்களில் அவருக்கு தனது செல்வாக்கு நிலைக்குமா, பதவி நிலைக்குமா என்ற பயம் வந்துவிட்டது. அதை அவருடைய உரையே காட்டிக் கொடுத்துவிட்டது” என்றும் முரசொலி தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல்வரின் புலம்பலுக்கு காரணம் என்ன?
சுதந்திர தினத்தன்று கொடியேற்றிய பின்னர் முதலமைச்சர் விஜய் பேசியது குறித்தும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களை நம்பி வாக்களித்த நிலையில், அரசுடன் தொடர்ந்து இருக்க வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டது குறித்து, “இந்தப் புலம்பலுக்கு, இந்த அழுகைக்கு என்ன காரணம்?” என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அதிமுக எம்.எல்.ஏக்கள் 5 பேர் பாமக தலைவர் அன்புமணியுடன் சந்திப்பு.. அரசியல் பின்னணி என்ன?
மேலும், கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம், போதைப்பொருள் நடமாட்டம் தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை சுட்டிக்காட்டி தமிழக அரசை முரசொலி விமர்சித்துள்ளது.
சினிமா தயாரிப்பாளர்களுக்கு வாரி வழங்கப்பட்ட பதவிகள்:
அதுமட்டுமின்றி, தமிழக வெற்றிக் கழக அரசில் சினிமா தயாரிப்பாளர்களுக்கு பதவிகள் வழங்கப்படுவதாகவும் முரசொலி குற்றம்சாட்டியுள்ளது. ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைத் தயாரித்த வெங்கட நாராயணா தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ‘பிகில்’, ‘கோட்’ திரைப்படங்களைத் தயாரித்த அர்ச்சனா கல்பாத்தி கோயில்களுக்கான அறங்காவலர்களைத் தேர்வு செய்யும் பணியில் இடம்பெற உள்ளதாகவும், ‘லியோ’ திரைப்படத்தைத் தயாரித்த ஜெகதீஷ் பழனிசாமி முதலமைச்சரின் தனிச் செயலாளராக உள்ளதாகவும் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீது கூறப்படும் புகார்கள் தொடர்பாக முதலமைச்சர் விஜய் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் முரசொலி குற்றம்சாட்டியுள்ளது.
அரசை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டால் கைது செய்யப்படுவதாகவும், நீதிமன்றங்கள் தமிழக வெற்றிக் கழக ஆட்சியாளர்களுக்கு எதிராக தொடர்ந்து கண்டனங்களைத் தெரிவித்து வருவதாகவும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் செய்வதையெல்லாம் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?
சுதந்திர தின விழாவுக்கு நடிகை ஒருவரை அழைத்து வந்து அவருக்கு முதலமைச்சர் சல்யூட் அடித்ததை விமர்சித்துள்ள முரசொலி, “இந்தக் காட்சியை விஜய் ரசிகர்களாலேயே ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால், மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் படிக்க: திமுக பாதையில் தவெக அரசும் பயணிக்கிறதா? அரசின் இந்த போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் – அண்ணாமலை..
மேலும், விஜய்யின் திரைப்படப் புகழை குறிப்பிட்டு, “விஜய் நன்றாக நடனம் ஆடுவார் என்பதற்காக உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டணத்தை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? விஜய் அழகாகச் சிரிக்கிறார் என்பதற்காக சொத்து வரியை எவ்வளவு வேண்டுமானாலும் உயர்த்திக்கொள்ளுங்கள் என்று தமிழக மக்கள் சொல்லிவிடுவார்களா?” என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
3 மாதங்களில் முதல்வர் விஜய்க்கு வந்த பயம்:
சமூக வலைதளங்களில் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாகவும், “உங்களுக்குத்தான் வாக்களித்தோம்; வாக்களித்ததற்காக வருத்தப்படுகிறோம்” எனக் கூறும் வீடியோக்கள் அதிகமாகப் பரவி வருவதாகவும் முரசொலி குறிப்பிட்டுள்ளது.
இதனால், “என்னோடு இருங்கள், போய்விடாதீர்கள்” என முதலமைச்சர் விஜய் மக்களிடம் ஆதரவு கோருவதாகவும் முரசொலி தலையங்கத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக, “மக்கள் ஏமாளிகள் அல்ல” எனக் குறிப்பிட்டு, தமிழக வெற்றிக் கழக அரசின் செயல்பாடுகளை முரசொலி கடுமையாக விமர்சித்துள்ளது.