அரசு மருத்துவமனை மருந்து கவரில் ஹிந்தி: திமுக விமர்சனத்துக்கு அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்
Hindi Language on Medicine Covers : கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரை கவர்களில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தியும் இடம்பெற்றிருப்பது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், திமுக ஆட்சி காலத்திலேயே மருந்து கவர் பெறப்பட்டதாக விளக்கமளித்திருக்கிறார்.
கோவை, அக்டோபர் 7 : கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரை கவர்களில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தியும் இடம்பெற்றிருப்பது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இதற்கு திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்ட எதிர்கட்சியினர் கண்டனம் தெரிவித்த நிலையில், அந்த கவர்கள் முந்தைய திமுக ஆட்சிக்காலத்திலேயே அச்சிடப்பட்டவை என சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் விளக்கமளித்துள்ளார்.
மருந்து கவரில் ஹிந்தி இடம்பெற்ற சர்ச்சைக்கு அமைச்சர் விளக்கம்
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோயம்புத்தூர் மட்டுமல்லாமல், திருப்பூர், ஈரோடு என அண்டை மாவட்டங்களில் இருந்தும் தினமும் 5,000க்கும் அதிகமானோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெறு்று வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவமனையில் நோயாளிகளுக்கான மருந்துகள் தனித்தனி கவர்களில் வழங்கப்படுகின்றன. அந்த கவர்களில் மருந்தின் பெயர், அளவு, காலை, மதியம், இரவு என எந்த நேரத்தில் உட்கொள்ள வேண்டும் போன்ற விவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அச்சிடப்பட்டிருந்தன. இந்த நிலையில் இந்த மருந்து கவரில் ஹிந்தியும் சேர்க்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இதையும் படிக்க : விண்ணை முட்டும் அரசி விலை.. தீபாவளிக்கு முன் ஒரு கிலோ ரூ. 100- ஐ தொடும்.. இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி!




இந்த நிலையில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என தவெக அரசு கூறிவரும் நிலையில், அரசு மருத்துவமனையில் இந்தி இடம்பெற்றது கண்டனத்துக்குரியது என திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா விமர்சித்துள்ளார். தமிழக அரசு மருத்துவமனைகளில் மும்மொழிக் கொள்கை அமலுக்கு வந்துவிட்டதா என எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பிய அவர், முதலில் கரூரிலும் இப்போது கோவையிலும் இதே நிலை என்று குறிப்பிட்டு, மருந்து கவர்களின் புகைப்படங்களையும் பகிர்ந்தார்.
தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணனும் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தற்போதைய அரசு பொறுப்பேற்றதிலிருந்து மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் எக்ஸ் தளத்தில் விரிவான பதில் அளித்தார். இந்த விவகாரத்தில் திமுக மலிவான அரசியல் செய்வதாக அவர் குற்றம்சாட்டினார். அவரது பதிவில் கடந் 2025 டிசம்பரில் மத்திய சிறையிலிருந்து வழக்கமாக வரும் மாத்திரை கவர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போதைய திமுக ஆட்சியில், டிசம்பர் 31, 2025 அன்று ஈரோடு மாவட்ட அச்சகத் தொழில் கூட்டுறவுச் சங்கத்துக்கு 4 லட்சம் கவர்கள் அச்சிட அவசர ஆணை வழங்கப்பட்டது. அந்த கவர்கள் 2026 ஜனவரி முதலே நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றனன.
கோவையைப் பொறுத்தவரை, சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இந்த வடிவமைப்பு அலுவல் நடைமுறைப்படி அங்கீகரிக்கப்பட்டு, சிந்தாமணி கூட்டுறவு நிறுவனம் மூலம் அச்சிடப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. திமுக ஆட்சியிலேயே இந்திக்கு அனுமதி அளித்து, அதற்கான வார்ப்புருவை உருவாக்கி, நோயாளிகளிடம் புழக்கத்துக்கு விட்டுவிட்டு, இப்போது ஆளுங்கட்சி மீது பழிபோடுவது ஏன் என அவர் கேள்வி எழுப்பினார். அப்போது அமைதியாக இருந்த திமுகவினர், இப்போது திடீரென மொழிக் காவலர்களாக மாறுவது ஏன் என்றும் விமர்சித்தார்.
இதையும் படிக்க : எண்ணூர் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்களை கத்தியால் வெட்ட முயற்சி – இருவர் கைது
மேலும் இந்த விவகாரம் அரசின் கவனத்துக்கு வந்தவுடன், கரூர் மற்றும் கோவை ஆகிய இரு மருத்துவமனைகளிலும் அந்தக் கவர்களின் பயன்பாடு உடனடியாக நிறுத்தப்பட்டதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார். கரூரில் பழைய நடைமுறைப்படி மத்திய சிறையிலிருந்தே கவர்கள் பெறப்பட்டு, தமிழில் மட்டும் விவரங்கள் அச்சிடப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றன. கோவையில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே கொண்ட புதிய கவர்கள் உடனடியாகத் தயாரிக்கப்பட்டுப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படுவதாகவும் அவர் உறுதியளித்தார்.