எண்ணூர் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்களை கத்தியால் வெட்ட முயற்சி – இருவர் கைது
Ennore Railway Station : சென்னை எண்ணூர் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்களை பட்டா கத்தியால் வெட்ட முயன்றதாக கூறப்படும் சம்பவத்தில், மாநில கல்லூரியைச் சேர்ந்த மாணவர் சிவசக்தி மற்றும் முன்னாள் மாணவர் விஜய் சந்தோஷ் ஆகிய இருவரை கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை, அக்டோபர் 7 : சென்னை எண்ணூர் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்களை பட்டா கத்தியால் வெட்ட முயன்றதாக கூறப்படும் சம்பவத்தில், மாநில கல்லூரியைச் சேர்ந்த மாணவர் சிவசக்தி மற்றும் முன்னாள் மாணவர் விஜய் சந்தோஷ் ஆகிய இருவரை கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் பச்சையப்பன் என்பவர் தலைமறைவாக உள்ளார்.
எண்ணூர் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்களை கத்தியால் வெட்ட முயற்சி
எண்ணூர் ரயில் நிலையம் நடைமேடை 2 மற்றும் 3-ல் ரயில் வந்து நின்றபோது, நடைமேடையில் நின்றிருந்த இரண்டு நபர்கள் தலா ஒரு பட்டா கத்தியை கையில் வைத்துக்கொண்டு, ரயிலில் கல்லூரி மாணவர்கள் இருந்த பெட்டியை நோக்கி கத்தியை நடைமேடையில் உரசியபடி ஓடியதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த கல்லூரி மாணவர்கள் ரயிலில் இருந்து கீழே குதித்து ஓடியதாகவும், அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியபடி, “உங்களை வெட்டாமல் விடமாட்டோம்” எனக் கூறி கத்தியுடன் துரத்தியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க : போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல ப்ளான்.. நாகை துறைமுகத்தில் சிக்கிய பெண்.. குடியுரிமை அதிகாரிகள் அதிரடி!




இதையடுத்து, எண்ணூர் ஆர்பிஎஃப் அவுட்போஸ்டில் பணியாற்றிய உதவி ஆய்வாளர் ஜோசப், அந்த நபர்களை பிடிக்க முயன்றபோது அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியான சிவசக்தி (22) என்பவரை தண்டையார்பேட்டை ரயில் நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 51 செ.மீ. நீளமுள்ள மர கைப்பிடியுடன் கூடிய பட்டா கத்தி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து, மூன்றாவது குற்றவாளியான விஜய் சந்தோஷ் (23) என்பவரையும் விம்கோ நகர் ரயில் நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 52 செ.மீ. நீளமுள்ள இரும்பு கைப்பிடியுடன் கூடிய பட்டா கத்தி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட விஜய் சந்தோஷ், மாநில கல்லூரியில் பி.எஸ்சி. தாவரவியல் படிப்பை முடித்த முன்னாள் மாணவர் என்பதும், தற்போது சோழவரம் பகுதியில் உள்ள பிளிப்கார்ட் நிறுவனத்தில் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் பணியில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், விஜய் சந்தோஷ் மீது கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் மூன்று வழக்குகளும், H8 திருவொற்றியூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் ஏற்கனவே உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியான பச்சையப்பன், மாநில கல்லூரியில் பி.ஏ. அரசியல் அறிவியல் இரண்டாம் ஆண்டு படித்து வருவதாகவும், அவர் தலைமறைவாக உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க : வெற்றிப் பயணத்தால் விபரீதம்.. அதிரடி முடிவை கையில் எடுத்த தனியார் பேருந்து உரிமையாளர்கள்.. கொந்தளிப்பில் பயணிகள்!
இருவர் மீதும் BNS சட்டப்பிரிவுகள் 296(b), 125, 351(3) மற்றும் Arms Act 1959-ன் 25(1)(a) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சிவசக்தி மற்றும் விஜய் சந்தோஷ் ஆகிய இருவரும் திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும் நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். தலைமறைவாக உள்ள பச்சையப்பனை கைது செய்யவும், இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.