ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. ஒரு மாதம் முழுவதும் தீவிர டிக்கெட் சோதனை மேற்கொள்ள ரயில்வே நிர்வாகம் முடிவு..
ஒரே டிக்கெட்டில் பலர் பயணம் செய்தால், அந்த டிக்கெட்டில் இடம்பெற்றுள்ள குறைந்தபட்சம் ஒரு பயணி தேவையான அசல் அடையாள ஆவணத்தை வைத்திருக்க வேண்டும். உரிய அசல் ஆவணம் இல்லாத நிலையில், அந்த டிக்கெட்டில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளும் செல்லுபடியாகும் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதாகக் கருதப்பட்டு விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 2, 2026: பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில், ரயில்களில் டிக்கெட் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் இந்திய ரயில்வே தீவிர டிக்கெட் சோதனை நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது. மத்திய ரயில்வே சார்பில் அக்டோபர் 1 முதல் 31ஆம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு இந்த சிறப்பு சோதனை நடைபெறுகிறது.
இந்த சிறப்பு நடவடிக்கையில் பயணிகளின் டிக்கெட் செல்லுபடியாகும் தன்மை மற்றும் உண்மைத்தன்மை சரிபார்க்கப்படும். குறிப்பாக, சலுகை டிக்கெட்டுகள், குறிப்பிட்ட முன்பதிவு ஒதுக்கீடுகள் மற்றும் ரயில்வே பாஸ் மூலம் பயணம் செய்வோரிடம் கூடுதல் சோதனை மேற்கொள்ளப்படும்.
சலுகை மற்றும் சிறப்பு ஒதுக்கீட்டு டிக்கெட்டுகளுக்கு கூடுதல் சோதனை:
சலுகை அல்லது குறிப்பிட்ட ஒதுக்கீட்டின் கீழ் பயணம் செய்யும் பயணிகள், தங்களது தகுதியை உறுதி செய்வதற்காக அசல் அடையாள ஆவணத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
ஒரே டிக்கெட்டில் பலர் பயணம் செய்தால், அந்த டிக்கெட்டில் இடம்பெற்றுள்ள குறைந்தபட்சம் ஒரு பயணி தேவையான அசல் அடையாள ஆவணத்தை வைத்திருக்க வேண்டும். உரிய அசல் ஆவணம் இல்லாத நிலையில், அந்த டிக்கெட்டில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளும் செல்லுபடியாகும் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதாகக் கருதப்பட்டு விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இ-பாஸ், PTO பயணிகளுக்கு அறிவுரை:
E-Pass அல்லது PTO மூலம் பயணம் செய்பவர்கள், உரிய அசல் அடையாள ஆவணத்தை வைத்திருப்பதுடன், பயணம் மேற்கொள்வதற்கு முன்பு அந்த E-Pass அல்லது PTO உரிய பயண அதிகார ஆவணமாக மாற்றப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
முன்பதிவு இல்லாத ரயில் டிக்கெட்டுகளின் உண்மைத்தன்மையும் தீவிரமாக சரிபார்க்கப்படும். தேவையான இடங்களில் டிக்கெட் பரிசோதனை ஊழியர்கள் TTE App மூலம் டிக்கெட்டுகளைச் சரிபார்க்க உள்ளனர்.
இந்த நடவடிக்கையின் மூலம் சலுகைகள் மற்றும் முன்பதிவு வசதிகளை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது, போலி டிக்கெட்டுகள் மற்றும் பாஸ்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது, ரயில்வே வருவாய் இழப்பைத் தடுப்பது ஆகியவை நோக்கமாகக் கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: மனித குளத்திற்கு கலங்கரை விளக்கமாக திகழும் காந்தியின் வாழ்க்கை.. பிரதமர் மோடி மரியாதை..
செல்லுபடியாகும் ஆவனங்கள்:
வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், PAN அட்டை, ஓட்டுநர் உரிமம், மத்திய அல்லது மாநில அரசு வழங்கிய புகைப்பட அடையாள அட்டை, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மாணவர் அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்குப் புத்தகம், புகைப்படத்துடன் கூடிய வங்கி கிரெடிட் கார்டு மற்றும் ஆதார் அட்டை ஆகியவை செல்லுபடியாகும் அடையாள ஆவணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.
டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் ரூ.500 அபராதம்
செல்லுபடியாகும் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதற்கான குறைந்தபட்ச அபராதம் ரூ.250-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஜன விஸ்வாஸ் சட்டம், 2026ன் கீழ், இந்த மாற்றம் ஜூன் 20, 2026 முதல் அமலுக்கு வந்துள்ளது. எனவே, அக்டோபர் மாதம் முழுவதும் நடைபெறும் சிறப்பு சோதனையைக் கருத்தில் கொண்டு, பயணிகள் செல்லுபடியாகும் டிக்கெட்டுடன் தேவையான அசல் அடையாளம் மற்றும் தகுதி ஆவணங்களை எடுத்துச் செல்லுமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.