அதிமுக எம்.எல்.ஏக்கள் 5 பேர் பாமக தலைவர் அன்புமணியுடன் சந்திப்பு.. அரசியல் பின்னணி என்ன?
அரூர் தொகுதி எம்எல்ஏ சம்பத்குமார், அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏ வேலழகன், பண்ருட்டி தொகுதி எம்எல்ஏ மோகன், திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏ பழனிசாமி மற்றும் ஆற்காடு தொகுதி எம்எல்ஏ சுகுமார் ஆகியோர், தங்களது வெற்றிக்கு பாமகவின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததாகக் கூறி, அன்புமணி ராமதாஸை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் 18, 2026: அதிமுக எம்எல்ஏக்கள் 5 பேர், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை நேரில் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகிய மூன்று கட்சிகளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், அதிமுகவில் பல்வேறு உட்கட்சி விவகாரங்கள் பூதாகரமாகி வருகின்றன.
அதிமுக உட்கட்சி விவகாரம்:
குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில், எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் கட்சி தலைமையின் மீது அதிருப்தி தெரிவித்து போர்க்கொடி தூக்கியதாக கூறப்பட்டது.
இதனிடையே, அதிமுகவைச் சேர்ந்த 5 சட்டமன்ற உறுப்பினர்கள், குறிப்பாக முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
இதற்கிடையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோரின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. பின்னர், பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அவர்களுக்கு மீண்டும் கட்சிப் பதவிகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், மீண்டும் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி அதிருப்தியை வெளிப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை.. 24ஆம் தேதி வரை வெளுக்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்?
அதிமுக எம்.எல்.ஏக்கள் அன்புமணியுடன் சந்திப்பு:
இவ்வாறு அதிமுகவில் உட்கட்சி விவகாரங்கள் உச்சகட்டத்தில் இருக்கும் நிலையில், அதிமுகவைச் சேர்ந்த 5 எம்எல்ஏக்கள் சென்னை தியாகராய நகரில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸின் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. எனினும், இந்தச் சந்திப்பு வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே என்றும், இதற்குப் பின்னால் அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: நாட்டில் 14 முதல்வர்கள் மீது தீவிர குற்ற வழக்குகள் – பட்டியலில் இடம்பெற்ற முதல்வர் விஜய் – பரபரப்பு தகவல்
மரியாதை நிமித்தமான சந்திப்பு:
அரூர் தொகுதி எம்எல்ஏ சம்பத்குமார், அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏ வேலழகன், பண்ருட்டி தொகுதி எம்எல்ஏ மோகன், திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏ பழனிசாமி மற்றும் ஆற்காடு தொகுதி எம்எல்ஏ சுகுமார் ஆகியோர், தங்களது வெற்றிக்கு பாமகவின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததாகக் கூறி, அன்புமணி ராமதாஸை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே அதிமுகவில் பல்வேறு உட்கட்சி பிரச்சினைகள் நீடித்து வரும் நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் 5 பேர் தனியாக அன்புமணி ராமதாஸை சந்தித்துப் பேசியிருப்பது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.