”13 வயது இருக்கும்போதே அத்துமீறினார்!”.. ஜெம் வீரமணி வழக்கில் கைதான பெண் பகீர் குற்றச்சாட்டு!
Gem Veeramani Case: ஜெம் வீரமணி வழக்கில் கைதான சாந்தி என்பவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தனக்கு 13 வயதாக இருந்தபோதே ஜெம் வீரமணி பாலியல் ரீதியாக அத்துமீறியதாகப் பகீர் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார். குடும்ப நண்பர் என்ற முறையில் வீட்டிற்கு வந்து குடும்பத்தை ஆட்கொண்டு, தந்தையின் சொத்து உட்பட அனைத்துப் பணத்தையும் ஏமாற்றிவிட்டதாக அந்த வீடியோவில் அவர் கதறியுள்ளார்.
சென்னை, செப்.23: தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஜெம் கிரானைட்ஸ் அதிபர் ஜெம் வீரமணி மீதான வழக்கு விசாரணை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் நிதி மோசடி தொடர்பாக ஜெம் வீரமணி, அவரது கூட்டாளியான சாந்தி மற்றும் சைமன் ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இவ்வழக்கில் கைதான பெண் சாந்தி, கைது செய்யப்படுவதற்கு முன்பாகப் பதிவு செய்து வெளியிட்டுள்ள வீடியோ ஆதாரம் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், ஜெம் வீரமணி தனக்குச் செய்த கொடுமைகள் மற்றும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து அவர் திடுக்கிடும் தகவல்களைப் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க: ஜெம் கிராணைட் வீரமணிக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை… திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி விளக்கம்
13 வயதில் நேர்ந்த பாலியல் கொடுமை:
இதுதொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ பதிவில் பேசியுள்ள சாந்தி, ஜெம் வீரமணி தங்களது குடும்பத்திற்கு நீண்டகாலமாகக் குடும்ப நண்பராக அறிமுகமானவர் என்று தெரிவித்துள்ளார். தொழில் ரீதியாகத் தனது குடும்பத்திற்கு உதவுவது போல நடித்து வீட்டிற்குள் வந்த ஜெம் வீரமணி, தனக்குக் சுமார் 13 வயதாக இருந்தபோதே பாலியல் ரீதியாக அத்துமீறத் தொடங்கியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அப்போது தனக்கு அதுகுறித்த போதிய முதிர்ச்சியோ, அவரது தவறான எண்ணங்களைப் புரிந்து கொள்ளும் தெளிவோ இல்லாததால், தான் அறியாமலேயே அவரது பாலியல் சுரண்டலுக்கு இரையானதாக வேதனையுடன் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.
நிதி மோசடி மற்றும் உயிர் அச்சுறுத்தல்:
வீடியோவில் மேலும் பேசிய சாந்தி, ஜெம் வீரமணி தன்னை ஒரு ‘காட்ஃபாதர்’ போலக் காட்டிக்கொண்டு தனது தனிப்பட்ட தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார். அவரது வாக்குறுதிகளை 100 சதவீதம் நம்பியதால், ஜெம் வீரமணியின் நிதி நெருக்கடிகளின் போது கடன் வாங்கியும், தனது தந்தையின் சொத்து மூலம் கிடைத்த முழுப் பணத்தையும் அவரிடமே ஒப்படைத்ததாகவும் கூறியுள்ளார். ஆனால், தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் சீரழித்த ஜெம் வீரமணி மற்றும் அவரது மகன் சாய் வீரமணி ஆகியோரால் தற்போது தனது உயிருக்கே அச்சுறுத்தல் நிலவுவதாகவும், அதனால் தான் இந்த வாக்குமூலப் பதிவை வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அவதூறு வழக்கு… நீதிமன்றத்தில் மு.க. ஸ்டாலின் கொடுத்த பதிலடி.. முழு விவரம்!
வழக்கில் தீவிரமடையும் விசாரணை:
இவ்விவகாரத்தில் ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு சென்னை காவல் ஆணையரிடம் ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்பட்ட சூழலில், தற்போது இந்த வீடியோ ஆதாரம் வெளியாகி வழக்கை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இக்குற்றச்சாட்டுகள் மற்றும் நிதி பரிவர்த்தனைகள் குறித்துக் காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வரும் நிலையில், கைதான சாந்தி வெளியிட்ட வீடியோ வாக்குமூலம் அரசியல் மற்றும் தொழில் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.