ஜனநாயகத்தில் மாறுபட்ட கருத்துக்களையும் மதிக்க வேண்டும்.. – அரசுக்கு நீதிமன்றம் அறிவுரை
பழனி கோயில் நில விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் மீது அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட வினோத் சூர்யா ஜாமீன் கோரிய வழக்கை விசாரித்த நீதிபதி, அரசையோ, அமைச்சர்களையோ விமர்சிப்பது அரசுக்கோ, பொது அமைதிக்கோ எதிரான குற்றமாகாது எனக் கூறி அவரை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார்.
சென்னை, ஜூலை 23 : பழனி கோயில் நில விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் மீது அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட வினோத் சூர்யா ஜாமீன் கோரிய வழக்கு ஜூலை 23, 2026 இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததது. வழக்கை விசாரித்த நீதிபதி, அரசையோ, அமைச்சர்களையோ விமர்சிப்பது அரசுக்கோ, பொது அமைதிக்கோ எதிரான குற்றமாகாது எனக் கூறி அவரை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார். நீதிபதியின் இந்த கருத்து எதிர்கட்சிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
பழனி நில மோசடி விவகாரத்தில் நீதிமன்றம் கருத்து
பழனி கோயில் விவகாரம் தமிழகம் முழுவதும் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் பழனி கோயில் நில விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக வினோத் சூர்யா சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க : “நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டிய நேரம் இது!”.. மாணவர்கள் போராட்டத்தை சுட்டிக்காட்டி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!!




இந்நிலையில், தன்மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி வினோத் சூர்யாகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு கடந்த ஜூலை 17, 2026 அன்று விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதி, கலவரத்தைத் தூண்டும் வகையில் செயல்படுதல் என்ற பிரிவு இந்த வழக்கிற்கு பொருந்துமா? என காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பினார்.
மேலும், அந்த பதிவிற்கு அவதூறு வழக்கு தானே தொடர முடியும், இது குறித்து அரசுக்கு அறிவுறுத்துங்கள் என அரசு குற்றவியல் வழக்கறிஞரிடம் தெரிவித்தார். இந்த வழக்கில் காவல்துறையினர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5, 2026 அன்று நீதிபதி தள்ளிவைத்தார்.
இதற்கிடையில் வினோத் சூர்யா தனக்கு ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜனநாயகத்தில் மாறுபட்ட கருத்துக்களும் மதிக்கப்பட வேண்டும். அரசையோ, அமைச்சர்களையோ விமர்சிப்பது அரசுக்கோ, பொது அமைத்திக்கோ எதிரான குற்றமாகாது. அவதூறான, தரக்குறைவான கருத்துக்களை வெளியிடுவது புலன் விசாரணைக்குரிய குற்றம் அல்ல. ஜனநாயகத்தில் மாறுபட்ட கருத்துக்களையும் மதிக்க வேண்டும் என்று கூறி வினோத் சூர்யாவை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிக்க : தமிழ்நாடு பட்ஜெட் நடைமுறை.. சட்டப்பேரவையில் என்ன நடக்கும்? தாக்கல் முதல் ஒப்புதல் வரை ஒரு பார்வை!
பழனி தண்டாயுதபாணி கோவில் மடத்துக்கு சொந்தமான, ரூ.100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலம், ரூ.2 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. பழனி கோவிலுக்காக பக்தர் ஒருவர், 1888ல், மடத்தின் பெயரில் தானமாக கொடுத்த நிலம், தனியார் சிலரால் அபகரிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பத்திரம் பதிவான போது தான், பிரச்னை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்ததுடன், பின்னணி குறித்தும் விசாரிக்க உத்தரவிட்டது. அதன்படி, சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்