நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது.. “டாஸ்மாக் பணியாளர்களுக்கு ESI மருத்துவக் காப்பீடு!”..
TASMAC ESI medical scheme: டாஸ்மாக்கில் பணியாற்றும் 25,000-க்கும் மேற்பட்ட கடைப் பணியாளர்களுக்குக் கட்டாய இ.எஸ்.ஐ மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த நிர்வாகம் ஒப்புதல் அளித்து விரிவான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அறிவிப்பு, பல ஆண்டுகளாக மருத்துவப் பாதுகாப்பின்றிப் பணியாற்றி வந்த டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, ஜூலை 23: தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு இ.எஸ்.ஐ மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான விரிவான சுற்றறிக்கையை டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் நந்தகுமார் வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க: “தமிழகத்திலும் ஆசிரியர் நியமனத் தேர்வில் வினாத்தாள் கசிந்தது!”.. மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு!!
தொழிற்சங்கங்களின் கோரிக்கை ஏற்பு
தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 4,800-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் ஒப்பந்த மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களுக்குப் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், பணிப் பாதுகாப்பு மற்றும் மருத்துவப் பாதுகாப்பு வசதிகளைச் செய்து தர வேண்டும் என்று பல்வேறு தொழிற்சங்கங்களின் வாயிலாகத் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனர். சமீபத்தில் டாஸ்மாக் ஊழியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை ஏற்று, தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி ஊதிய உயர்வை நடைமுறைப்படுத்தியிருந்தார்.
நீண்ட நாள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி:
இந்நிலையில், டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்த தமிழக அரசு, அவர்களுக்கு இ.எஸ்.ஐ மருத்துவத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அண்மையில் அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதலை டாஸ்மாக் நிர்வாகம் தற்போது வழங்கியுள்ளது.
சுற்றறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள்:
டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் நந்தகுமார் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் இடம்பெற்றுள்ள கூடுதல் தகவல்கள், அனைத்து டாஸ்மாக் கடைப் பணியாளர்களையும் இ.எஸ்.ஐ திட்டத்தின் கீழ் ‘ஆன்லைன்’ மூலமாக உடனடியாகப் பதிவு செய்ய வேண்டும். இ.எஸ்.ஐ திட்டத்திற்கான மாதாந்திரப் பங்களிப்புத் தொகையை, ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதிக்குள் ஊழியர்களின் இ.எஸ்.ஐ கணக்கில் கட்டாயம் செலுத்தப்பட வேண்டும். வருகின்ற அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அனைத்து டாஸ்மாக் கடை ஊழியர்களும் கட்டாயமாக இ.எஸ்.ஐ திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தொடரும் மழை.. எத்தனை நாட்களுக்கு? வெப்பநிலை எப்படி இருக்கும்?
பணியாளர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள்:
இந்த இ.எஸ்.ஐ மருத்துவத் திட்டத்தின் மூலமாக, டாஸ்மாக் பணியாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்கள், இ.எஸ்.ஐ மருத்துவமனைகள் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் எவ்வித கட்டணமுமின்றிச் சிறப்பான மருத்துவச் சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கை, ஆயிரக்கணக்கான டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.