டெல்லி போராட்டத்தை திசைதிருப்ப முயற்சி.. மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் – அண்ணாமலை
நீங்கள் அமைதியாக இருந்து, சுயநல நோக்கம் கொண்டவர்கள் தங்களது நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்ல அனுமதித்தால், உங்கள் போராட்டத்தின் அடிப்படை நோக்கங்களில் இருந்து நீங்கள் விலகிச் செல்கிறீர்கள் என்று பொருள். தயவுசெய்து அது நடக்க அனுமதிக்காதீர்கள் என வீ த லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
ஜூலை 22, 2026: டெல்லியில் மாணவர்கள் நடத்தி வரும் நீட் எதிர்ப்புப் போராட்டத்தை, சுயநல நோக்கம் கொண்டவர்கள் தங்களது சொந்த நோக்கத்திற்காக திசைதிருப்ப முயற்சிப்பது இயல்பானது என ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த சில நாட்களாக, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளில் 3 முறை வினாத்தாள் கசிவு:
Over the past many years, I have taken a personal stand in support of the NEET examination, arguing that it brought uniformity in student selection across the country and gave students from underprivileged backgrounds a real shot at pursuing their dream of medical education. In…
— K.Annamalai (@annamalai_k) July 22, 2026
இந்த நிலையில், பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த பல ஆண்டுகளாக, நீட் தேர்வுக்கு ஆதரவாக நான் தனிப்பட்ட முறையில் தொடர்ந்து நிலைப்பாடு எடுத்துள்ளேன். நாடு முழுவதும் மாணவர்களை ஒரே மாதிரியான முறையில் தேர்வு செய்வதற்கு நீட் தேர்வு வழிவகுத்ததுடன், பின்தங்கிய பின்னணியில் இருந்து வரும் மாணவர்களுக்கும் மருத்துவக் கல்வியைத் தொடரும் அவர்களின் கனவை நனவாக்க உண்மையான வாய்ப்பை வழங்கியது என்பதே அதற்கான எனது வாதமாக இருந்தது.
ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் நீட்-யுஜி தேர்வுக்கான வினாத்தாள் மூன்று முறை கசிந்துள்ளது. ஒரே மாதிரியான தேர்வு முறையை ஏற்படுத்த வேண்டிய அமைப்பே தோல்வியடைந்த நிலையில், மாணவர்கள் மீண்டும் ஒருமுறை தேர்வு நடைமுறையை எதிர்கொள்ள வேண்டியிருந்ததால் அவர்கள் மீது ஏற்பட்ட அழுத்தத்தை நினைத்துப் பாருங்கள்.
பேச்சுவார்த்தை நடத்த ஏன் இவ்வளவு தாமதம்?
ஆனால், இதற்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் மீது எந்தவிதமான பொறுப்புக்கூறலும் ஏற்படுத்தப்படவில்லை. மாணவர்கள் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்தி வீதிகளில் இறங்கிப் போராடுவதற்கான மனநிலை உருவானது அந்தத் தருணத்தில்தான் என நான் வலுவாக நம்புகிறேன்.
ஜனநாயகத்தில் போராட்டம் நடத்துவது அடிப்படை உரிமையாகும். இருப்பினும், இங்கு எழும் முக்கியமான கேள்வி இதுதான்: பாஜக தலைமையிலான மத்திய அரசு, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்க ஏன் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது? போராட்டம் உச்சகட்டத்தை எட்டும் வரை ஏன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை தாமதப்படுத்தப்பட்டது? உங்களை இத்தனை காலம் காத்திருக்கச் செய்தது எது?
போராட்டத்தையே முழுமையாகத் திசைதிருப்ப முயற்சிப்பது இயல்பானது:
இங்கு மாணவர்களுக்கும், அவர்களை வழிநடத்தும் நபர்களுக்கும் ஒரு பொறுப்பு உள்ளது. ஒரு போராட்டம் பல வாரங்களாக நீடிக்கும்போது, சுயநல நோக்கம் கொண்டவர்கள் மேடையேறி, போராட்டத்தின் தொடக்கக் கோரிக்கைகளுடன் முற்றிலும் தொடர்பில்லாத கருத்துகளைத் தெரிவிப்பது அல்லது தங்களது சொந்த நோக்கத்திற்காகப் போராட்டத்தையே முழுமையாகத் திசைதிருப்ப முயற்சிப்பது இயல்பானது.
நீங்கள் அமைதியாக இருந்து, சுயநல நோக்கம் கொண்டவர்கள் தங்களது நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்ல அனுமதித்தால், உங்கள் போராட்டத்தின் அடிப்படை நோக்கங்களில் இருந்து நீங்கள் விலகிச் செல்கிறீர்கள் என்று பொருள். தயவுசெய்து அது நடக்க அனுமதிக்காதீர்கள்!
பாஜக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்:
பாஜக தலைமையிலான மத்திய அரசு அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையைத் தொடங்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், தற்போதுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விரைவான மற்றும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவும் நான் வலியுறுத்துகிறேன்.
எந்தவொரு நாட்டின் வலிமையும், அதன் நிறுவனங்கள் மீது இளைஞர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையில்தான் உள்ளது. நமது மாணவர்கள் கல்வி அமைப்பின் நியாயத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை மீது நம்பிக்கையை இழந்துவிட்டால், நமது நாட்டின் எதிர்காலத்தையே நாம் ஆபத்தில் ஆழ்த்துகிறோம்.