தவெக அமைச்சரவையில் காங்கிரஸ்… 6 தசாப்தங்களுக்கு பிறகு மாற்றம்.. 2 பேருக்கு அடித்தது ஜாக்பாட்!
Tvk Cabinet Congress Member : தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரு எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 59 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிட்டு 108 தொகுதிகளில் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. ஆனால், ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 தொகுதிகள் இல்லாத காரணத்தால் திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் அங்கம் வகித்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 எம்எல்ஏக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தலா 2 எம்எல்ஏக்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஒரு எம்எல்ஏ, அதிமுகவில் எஸ். பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையிலான 25 எம்எல்ஏக்கள் 37 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்து பெரும்பான்மையை நிரூபித்தது. இதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் ஜோசப் விஜய், என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், அருண்ராஜ், சி. டி. ஆர். நிர்மல் குமார், ராஜ்மோகன் உள்ளிட்ட 10 அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
காங்கிரஸ் கட்சிக்கு இரு அமைச்சர் இடம்
இதைத் தொடர்ந்து, மீதமுள்ள துறைகளுக்கு அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டு விரைவில் தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. இது தொடர்பாக, தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 எம்எல்ஏக்களில் இருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
மேலும் படிக்க: சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!




காங்கிரஸ் அமைச்சர் தொடர்பாக தீவிர ஆலோசனை
மேலும், இது தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, மற்றொரு தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, அகில இந்திய பொதுச் செயலாளர் கே. சி. வேணுகோபால், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். இதில், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினரான ராஜேஷ் குமார் மற்றும் மேலூர் சட்டமன்ற உறுப்பினரான விஸ்வநாதன் ஆகியோரை அமைச்சரவையில் இடம்பெற செய்யலாம் என்று ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது.
கிள்ளியூர் – மேலூர் எம்எல்ஏவுக்கு ஜாக்பாட்
அதன்படி, தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்களான ராஜேஷ் குமார் மற்றும் விஸ்வநாதன் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது. இதன் மூலம், சுமார் 59 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் இடம் பெற உள்ளனர். இதேபோல, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திண்டிவனம் தொகுதி எம்எல்ஏவான வன்னி அரசுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கு அமைச்சர் பதவி வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: சி.வி.சண்முகம் பதவி சுகத்துக்காக அதிமுகவை அழிக்கிறார்… அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி அட்டாக்!