தவெக அமைச்சரவை நாளை விரிவாக்கம்… யார் யாருக்கு இடம்? ஆளுநர் மாளிகை அதிரடி அறிவிப்பு!
TVK Cabinet Expanded : தமிழக வெற்றிக் கழக அரசின் அமைச்சரவை நாளை வியாழக்கிழமை ( மே 21- ஆம் தேதி) விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதில், சுமார் 10 முதல் 15 அமைச்சர்கள் வரை பதவி ஏற்பார்கள் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 232 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது. இதில், 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருந்தாலும், ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் இல்லாத காரணத்தால் திமுக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் 12 ஆதரவு எம்எல்ஏக்கள் மற்றும் அதிமுகவில் எஸ். பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான 25 எம்எல்ஏக்கள் என மொத்தம் 37 ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்து பெரும்பான்மையே நிரூபித்தது. இதைத் தொடர்ந்து, முதல்வர் ஜோசப் விஜய்யுடன் சேர்த்து 10 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு, சுமார் 7 நாட்கள் ஆகியும் துறைகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்து வந்தது.
10 அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு
இதன் காரணமாக சம்பந்தப்பட்ட துறைகளில் முக்கிய பணிகள் எதுவும் நடைபெறாமல் கோப்புகள் தேங்கி கிடந்தன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் விஜய், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ், செங்கோட்டையன், சி.டி. ஆர். நிர்மல் குமார், ராஜ்மோகன் உள்ளிட்ட 10 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மீதமுள்ள துறைகளுக்கு அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டு தமிழக வெற்றிக் கழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் படிக்க: சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!





தவெக அமைச்சரவை விரிவாக்க அழைப்பிதழ்
கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கீடு
அதன்படி, தவெக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ் குமார் மற்றும் மேலூர் எம்எல்ஏ விஸ்வநாதன் ஆகியோருக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதே போல, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திண்டிவனம் எம்எல்ஏ வன்னி அரசு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்எல்ஏ ஆகியோருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நாளை வியாழக்கிழமை ( மே 21- ஆம் தேதி) தமிழக வெற்றிக்கழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன.
தவெக அமைச்சரவை நாளை விரிவாக்கம்
அதன்படி, தமிழக ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து நாளை தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சியில் சுமார் 10 முதல் 15 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவி ஏற்பார்கள் என்று தெரிகிறது. மீதமுள்ள துறைகளுக்கு கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் தேர்வு செய்யப்பட்டு விரைவில் அவர்களும் அமைச்சர்களாக பதவி ஏற்பார்கள் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க: சி.வி.சண்முகம் பதவி சுகத்துக்காக அதிமுகவை அழிக்கிறார்… அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி அட்டாக்!