வேகமாக பைக் ஓட்டியதால் மோதல்.. கோவையில் இளைஞர் கொடூர கொலை.. 8 பேர் அதிரடி கைது!
Coimbatore Young Man Murder : கோயம்புத்தூர் மாவட்டத்தில் பைக்கில் வேகமாக சென்ற தகராறில் தனியார் நிறுவனத்தில் வேலை தேடி வந்த இளைஞர் 9 பேர் கொண்ட கும்பல் கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்தது. இதில், 8 பேர் கைதாகினர்.
சென்னை மாவட்டம், வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் நவீன் ( 24 வயது). இவர், கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம். பி. ஏ. படித்து வந்த நிலையில், தற்போது படிப்பு முடிந்து சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இவர், அவ்வப்போது விடுமுறையில் கோயம்புத்தூர் வருகை தருவது உண்டு. அப்போது, தனது நண்பர்களை நேரில் சந்தித்து பல்வேறு இடங்களுக்கு செல்வது வழக்கமாகும். அதன்படி, சம்பவத்தன்று விடுமுறையில் கோவைக்கு வந்திருந்த நவீன் உடையாம்பாளையத்தில் உள்ள அசோக் நகர் பகுதியில் தங்கி இருக்கும் தனது நண்பர்களின் அறைக்கு சென்று தங்கினார். அங்கிருந்து, கோவையில் தனியார் நிறுவனங்களில் வேலை தேடி வந்தார். இந்த நிலையில், நவீன் தனது நண்பர்கள் பைக்கில் அந்த பகுதியில் உள்ள வீதிகளில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது.
பைக்கில் வேகமாக சென்றதை தட்டிக் கேட்ட நபர்
இதே போல, சம்பவத்தன்று நவீன் நண்பர்கள் இருவர் பைக்கில் வேகமாக சென்றதாக தெரிகிறது. அப்போது, அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் ( 20 வயது) என்பவர் அந்த நபர்களை பிடித்து ஏன் இவ்வாறு வேகமாக செல்கிறீர்கள் என்று கண்டித்ததாக தெரிகிறது. இந்த விவரம் குறித்து அந்த நபர்கள் நவீனிடம் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, சம்பவத்தன்று இரவு சந்தோஷ் அந்த பகுதியில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். இதை பார்த்த நவீன் மற்றும் அவரது இரு நண்பர்கள் ஆகியோர் அவரை வலுக்கட்டாயமாக தங்களது அறைக்கு அழைத்து சென்று தாக்கியதாக தெரிகிறது.
மேலும் படிக்க: Tamil Nadu School Education Budget 2026: அரசு பள்ளிகளில் “சூப்பர் க்ளீன்- சூப்பர் கேம்பஸ்” திட்டம்.. அமைச்சர் மரியவில்சன் அறிவிப்பு!




அறைக்குள் அத்துமீறி நுழைந்து இளைஞருக்கு கத்திக்குத்து
இதனால், சந்தோஷ் கடும் ஆத்திரம் அடைந்ததுடன், இது தொடர்பாக தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, விக்னேஷ் உள்பட 9 பேர் சேர்ந்து நவீன் தங்கி இருக்கும் அறைக்குள் அத்துமீறி நுழைந்து அறையில் இருந்த 5 பேரை சரமாரியாக தாக்கினர். அப்போது, அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் நவீனின் நெஞ்சில் பலமாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதில், பலத்த காயமடைந்த நவீன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
8 பேரை கைது செய்த போலீசார்
உடனே, அவரது நண்பர்கள் நவீனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே நவீன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக அந்த பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷ், விக்னேஷ் உள்பட 8 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தலை மறைவாக உள்ள நபர்களை தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க: Tamil Nadu Animal Husbandry Department Budget 2026 : கால்நடை காப்போம் திட்டத்திற்கு ரூ.31 கோடி ஒதுக்கீடு… அமைச்சர் சூப்பர் அறிவிப்பு!