Tamil Nadu School Education Budget 2026: அரசு பள்ளிகளில் “சூப்பர் க்ளீன்- சூப்பர் கேம்பஸ்” திட்டம்.. அமைச்சர் மரியவில்சன் அறிவிப்பு!
Tamil Nadu Budget School Education Allocation : தமிழக அரசுப் பள்ளிகளில் ரூ. 139 கோடியில் சூப்பர் கிளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக நிதித்துறை அமைச்சர் மரியவில்சன் தெரிவித்தார். முதல் கட்டமாக சுமார் 10 ஆயிரம் பள்ளிகளில் இந்த திட்டம் வரப்போகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று புதன்கிழமை ( ஆகஸ்ட் 5- ஆம் தேதி) காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில், நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் மரிய வில்சன் முழு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இதில், தமிழகத்தில் அரசு பள்ளிகளில் சூப்பர் கிளீன் சூப்பர் கேம்பஸ் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக சுமார் 10,000 பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு இதற்காக முதல் கட்டமாக ரூ. 139 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுப் பள்ளிகள் கழிவறை, வகுப்பறை உள்ளிட்டவை தூய்மையாகவும் 24 மணி நேரம் பாதுகாப்பாகவும் இருக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
அரசு பள்ளிகளில் தூய்மை பணி
தமிழகத்தில் செயல்படும் அரசுப் பள்ளி மாணவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையிலும், பள்ளி வளாகங்களை எப்போதும் தூய்மையாக வைத்திருப்பதற்காகவும், பள்ளிகளில் உள்ள கழிவறைகளை முறையாக பராமரித்து சுகாதாரமான முறையில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளி சொத்துகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 24 மணி நேரமும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது.
பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ. 44,527 கோடி ஒதுக்கீடு
அரசு பள்ளி வளாகங்களுக்குள் அரசியல் கட்சியினரோ அல்லது வெளிநபரோ நுழைந்து அரசியல் சார்ந்த கூட்டங்களை நடத்துவது முழுமையாக தடை செய்யப்படும். மாணவர்களின் கல்வி தரம் மற்றும் வசதிகளை மேம்படுத்தும் ஒட்டு மொத்த பள்ளிக் கல்வித் துறைக்காக இந்த பட்ஜெட்டில் மொத்தம் ரூ. 44 ஆயிரத்து 527 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
போதையில்லா தமிழ்நாடு திட்டத்தில் ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு
போதையில்லா தமிழ்நாடு திட்டத்தின் கீழ் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ. 7 கோடி, போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி: அரசுப் பணி மற்றும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க ரூ. 3.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் நிதி நிலை அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.