கோதாவரி – காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம் – பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார். தென் மாவட்டங்களான, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகியவை தொடர்ந்து கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சென்னை, ஆகஸ்ட் 6 : கோதாவரி – காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் தனது கடிதத்தில் தமிழ்நாடு இயல்பாகவே மேற்பரப்புநீர் வளங்களில் பற்றாக்குறை கொண்டதாகவும், தனது நீர்த் தேவைகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமான அளவிற்கு அண்டை மாநிலங்களைச் சார்ந்தே உள்ளதாக முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
மேலும், மாநில அரசினால் தொடர்ச்சியான ஒழுங்குமுறை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும், நிலத்தடி நீர் வளமும் கவலைக்கிடமான கட்டத்தை எட்டும் அளவிற்குப் பயன்படுத்தப்பட்டு, பல பகுதிகளில் அது அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்படும் நிலை தொடர்கிறது என்று குறிப்பிட்டுள்ள அவர், தமிழ்நாட்டின் மேற்பரப்புநீர் வளங்களைப் பெருக்குவதற்கான மிக முக்கியமான நீண்டகால வாய்ப்பாகக் கோதாவரி – காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் திகழ்கிறது என்றும், தமிழ்நாட்டு மக்களின் குடிநீர் மற்றும் பாசனத்திற்கான அதிகரித்துவரும் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு இத்திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க : திமுக திட்டங்கள் மீது ஒட்டப்பட்ட வெற்றி லேபிள் – மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்




மேலும், தமிழ்நாட்டில் குறிப்பாக தென் மாவட்டங்களான, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ஆகியவை தொடர்ந்து கடுமையான நீர்ப் பற்றாக்குறையுடனும், வறட்சியாலும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளதாகவும் அம்மாவட்டங்களின் அதிகரித்துவரும் நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான மிகச்சிறந்த நிரந்தரமானத் தீர்வாக கோதாவரி – காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவது அவசியமென்றும், இத்திட்டத்தினால் வெள்ள உபரிநீரை நீர்ப் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்குத் திருப்பிவிட வழிவகுப்பதாய் அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இப்பெரிய திட்டத்தின் முதற்கட்டமாக, தேசிய நீர் மேம்பாட்டு முகமை, கோதாவரி பெண்ணாறு பாலாறு வெள்ளாறு இணைப்புத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரித்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். இத்திட்டத்தினால் தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்குப் பயனளிக்கும் என்றாலும், தற்போது தயாரித்துள்ள விரிவான திட்ட அறிக்கையில் உள்ள சீரமைப்பு வழியானது.
இதையும் படிக்க : மீண்டும் மீண்டுமா… உதயநிதி காரில் ஏற சென்ற எடப்பாடி.. சட்டப்பேரவையில் நிகழ்ந்த நிகழ்வு!
காவிரி ஆற்றிற்கு சில கிலோமீட்டர் முன்னதாகவே முடிவதால் அதற்குப் பதிலாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கோதாவரி காவிரி குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் எடுத்துக்கொள்ளுமாறு தாம் கேட்டுக்கொள்வதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இத்திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் சமூகப்பொருளாதார நன்மைகளைக் கருத்தில்கொண்டு, கோதாவரி – காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவாக செயல்படுத்திட, அதற்கு “தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம்” என்ற அந்தஸ்தை வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.