AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“தைரியம் இருந்தால் சட்டப்பேரவையில் பதில் சொல்லுங்கள்!”.. முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் சவால்!

தேர்தல் பிரசாரத்தின் போது 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் முழு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு முதலில் ரூ.50,000 என்றும், பின்னர் ரூ.75,000 என்றும் மாற்றி அறிவித்து விவசாயிகளை ஏமாற்றியுள்ளனர். முழு பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் போராடி வரும் நிலையில் அரசு மௌனம் காக்கிறது என விமர்சனம்.

“தைரியம் இருந்தால் சட்டப்பேரவையில் பதில் சொல்லுங்கள்!”.. முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் சவால்!
உதயநிதி ஸ்டாலின்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 06 Aug 2026 13:04 PM IST

சென்னை, ஆகஸ்ட் 06: தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026-27ஆம் நிதியாண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை நிதிநிலை அறிக்கை விவசாயிகளுக்கு எந்தவிதப் பயனும் அளிக்காத ஏமாற்றமான அறிக்கை என எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். விவசாயிகளுக்க தவெக அரசு துரோகம் செய்ததாக கூறி, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இன்றைய தினம் சட்டப்பேரவைக்குக் கருப்புச் சட்டை அணிந்து வந்து தங்களது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்தனர். தொடர்ந்து, பட்ஜெட் உரைக்கு பின் சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக இளைஞரணிச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், அரசின் வேளாண் பட்ஜெட்டை கடுமையாகச் விமர்சித்துப் பேட்டியளித்தார்.

இதையும் படிக்க: Tamil Nadu Agriculture Budget: உழவர் ஐடி பெற்ற விவசாயிகளுக்கு ‘மண்வள அட்டை’.. அமைச்சர் விக்னேஷ் முக்கிய அறிவிப்பு!!

திமுக திட்டங்களுக்குப் பெயர் மாற்றம்:

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உதயநிதி ஸ்டாலின், சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண் பட்ஜெட் குறித்துக் கூறியதாவது: “இந்த நிதிநிலை அறிக்கை பட்ஜெட் என்பதை விட, முதலமைச்சருக்கு முழுக்க முழுக்க ஜால்ரா அடித்து, மரபுக்கு மீறி மிகப்பெரிய புகழுரையைத் தெரிவிக்கும் அறிக்கையாகவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் புதிய திட்டம் எனச் சொல்வதற்கு எதுவுமே இல்லை. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்களின் பெயர்களை மாற்றி, அதன் முன்னால் தங்களது ஆளும் கட்சியின் பெயரையும் வார்த்தைகளையும் மட்டும் சேர்த்து, புதிய திட்டம் போல நாடகமாடி அறிவித்திருக்கிறார்கள்” என்றார்.

பயிர்க்கடன் தள்ளுபடி வாக்குறுதி என்னானது?

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஆளுங்கட்சி விவசாயிகளைத் தொடர்ந்து ஏமாற்றி வருவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், தேர்தல் பிரசாரத்தின் போது 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் முழு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் வாக்குறுதி அளித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு முதலில் ₹50,000 வரை மட்டுமே கடன் தள்ளுபடி என்றனர். பின்னர் திமுக மற்றும் விவசாயிகளின் எதிர்ப்பிற்குப் பிறகு அதை ₹75,000 ஆக உயர்த்தினர். தேர்தல் வாக்குறுதிப்படி முழு பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அரசு இது குறித்து எந்தப் பதிலையும் அளிக்காமல் மௌனம் காப்பதாகச் சாடினார்.

மேகதாட்டு & காவிரி நீர் தட்டுப்பாடு:

கடந்த சில மாதங்களாகத் தமிழக விவசாயிகள் சந்தித்து வரும் முக்கியப் பிரச்சினைகளுக்கு இந்த பட்ஜெட்டில் எந்தத் தீர்வும் இல்லை எனச் சுட்டிக்காட்டினார். மாநிலத்தில் காவிரி நீர் சரியாக வராததால், விவசாயிகள் குருவை சாகுபடி செய்ய முடியாமல் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளனர். கர்நாடக அரசின் மேகதாட்டு அணைப் பிரச்சினை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் சூழலில், தமிழக விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாக்க இந்த அரசு எந்தவொரு தீவிர நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த சில மாதங்களாகப் பல இன்னல்களுக்கு ஆளாகி வரும் விவசாயிகளின் குரலாகவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் விதமாகவும், தலைவரின் உத்தரவின் பேரில் திமுக எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் கருப்புச் சட்டை அணிந்து வந்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.

இதையும் படிக்க: 6 நிமிடம் முதல்வரை புகழ்ந்த அமைச்சர்.. கொதித்த திமுக எம்.எல்.ஏக்கள்.. எண்ட் கார்டு போட்ட சபாநாயகர்!

தைரியம் இருந்தால் பதில் சொல்லுங்கள்:

காவிரி நீர் பிரச்சினை மற்றும் விவசாயிகளின் பாதிப்புகள் குறித்துச் சட்டமன்றத்தில் விவாதிக்கக் கேள்வி நேரம் முடிந்தவுடன் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவரச் சபாநாயகரிடம் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. “நாளை சட்டப்பேரவையில் விவசாயிகள் சார்ந்த அனைத்துப் பிரச்சினைகளையும் பேசுவோம். தைரியம் இருந்தால் முதலமைச்சர் எழுந்து நின்று எங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லட்டும்” என்று சவால் விடுத்தார்.

Follow Us