Tamil Nadu Agriculture Budget: உழவர் ஐடி பெற்ற விவசாயிகளுக்கு ‘மண்வள அட்டை’.. அமைச்சர் விக்னேஷ் முக்கிய அறிவிப்பு!!
TN Agriculture Budget 2026: இயற்கை விவசாயிகளுக்கு இலவச சான்றிதழ், மண்வள பாதுகாப்பு இயக்கத்திற்கு ₹122.51 கோடி, நெல் விதை மானியத்திற்கு ₹34.72 கோடி நிதி ஒதுக்கீடு. மண் நல மேம்பாடு குறித்த தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைக்கவும், விழிப்புணர்வு மற்றும் விளம்பரப் பணிகளை மேற்கொள்ளவும் ₹2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஆகஸ்ட் 06: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026–2027ஆம் நிதியாண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை நிதிநிலை அறிக்கையில், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும், மண்வளத்தைப் பாதுகாக்கவும் மற்றும் நெல் விதை உற்பத்தியைப் பெருக்கவும் பல்வேறு சிறப்பு நிதி ஒதுக்கீடுகளும் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: Tamil Nadu Agriculture Budget 2026 LIVE: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் அமைச்சர்.. அப்டேட்ஸ்!
இயற்கை விவசாயிகளுக்குக் கட்டண விலக்கு:
இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் நிரந்தர மண்புழு உரக்கூடங்கள் அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய உயிர்ம உற்பத்தித் திட்டத்தில் புதிதாகப் பதிவு செய்யும் விவசாயிகளுக்கான பதிவுக்கட்டணம் மட்டுமின்றி, மாறுதல் காலத்தில் உள்ள விவசாயிகளுக்கான புதுப்பித்தல் கட்டணமும் முழுமையாக ரத்து செய்யப்பட்டு இலவச உயிர்ம சான்றிதழ் வழங்கப்படும். இயற்கை விளைபொருட்களின் தரத்தை உறுதிசெய்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்ய ஏதுவாக, நச்சுப் பரிசோதனை கட்டணத்திற்கு 100% மானியம் வழங்க ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மண்வளப் பாதுகாப்பு இயக்கம்:
2026–2027ஆம் நிதியாண்டில் 10 சிறப்பு கூறுகளுடன் ₹122.51 கோடி நிதியில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். களர், உவர் நிலச் சீர்திருத்தம்: களர் மற்றும் உவர் தன்மையால் பாதிக்கப்பட்ட 2,000 ஏக்கர் நிலங்களை மீட்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு. மண்நல மேம்பாட்டுத் தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வுப் பணிகளுக்கு ரூ.2 கோடி நிதி. பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் முறைகளைப் பின்பற்றும் விவசாயிகளுக்கு கார்பன் வர்த்தகம் மூலம் கூடுதல் வருமானம் ஈட்ட 2,000 ஏக்கரில் செயல்விளக்கம் அமைக்க ரூ.60 லட்சம் ஒதுக்கீடு.
மத்திய அரசு நிறுத்திய நெல் விதை மானியம்:
தரமான நெல் விதை உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கான மானியத்தை 2026-27 நிதியாண்டு முதல் ஒன்றிய அரசு நிறுத்திவிட்டது. ரூ.34.72 கோடி மாநில நிதி ஒதுக்கீடு: இருப்பினும், விவசாயிகளின் நலன் கருதி, தமிழ்நாடு அரசே முழுச் செலவையும் ஏற்று 7,730 மெட்ரிக் டன் சான்று நெல்விதை உற்பத்தி மானியம் மற்றும் 14,570 மெட்ரிக் டன் விதைகளை மானியத்தில் விநியோகிக்க ரூ.34.72 கோடி மாநில நிதியை ஒதுக்கியுள்ளது.
இதையும் படிக்க: 6 நிமிடம் முதல்வரை புகழ்ந்த அமைச்சர்.. கொதித்த திமுக எம்.எல்.ஏக்கள்.. எண்ட் கார்டு போட்ட சபாநாயகர்!
“மண்வள அட்டை” திட்டம்:
மண் ஆரோக்கியத்தை உயர்த்தி, விவசாயிகள் தங்களது நிலத்திற்கு ஏற்ப உரிய உரங்களை இட்டுச் சாகுபடி செலவைக் குறைக்கும் நோக்கில் “மண்வள அட்டை” திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைத் துறையின் ‘உழவர் ஐடி’ பதிவு வைத்துள்ள 3 லட்சம் விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவர். மண் பரிசோதனை மேற்கொண்டு மண்வள அட்டை வழங்கிட மாநில நிதியிலிருந்து ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.