“இபிஎஸ்-ஐ நாங்கள் ஏன் சந்திக்க வேண்டும்?”.. அமைச்சர் ஆனந்துடன் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் திடீர் சந்திப்பு!!
CV Shanmugam Attacks EPS: எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் அமைச்சர் ஆனந்தை சந்தித்தது குறித்து அளித்த விரிவான விளக்கத்தை காணலாம். எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒதுக்கப்பட்ட கட்சிப் பொறுப்புகளை ஏற்கச் சம்மதிக்காமல் அதிருப்தியில் இருந்து வரும் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆகிய முக்கிய தலைவர்கள், அமைச்சரைச் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, ஆகஸ்ட் 06: சட்டமன்ற வளாகத்தில் அமைச்சர் என்.ஆனந்த் அறையில் அதிமுக அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் சந்தித்த நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரைச் சந்தித்து விட்டு வெளியே வந்த பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குச் சி.வி.சண்முகம் அளித்த பதில் அதிமுகவிற்குள் இருக்கும் உள்கட்சிப் பூசலை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
இதையும் படிக்க: 6 நிமிடம் முதல்வரை புகழ்ந்த அமைச்சர்.. கொதித்த திமுக எம்.எல்.ஏக்கள்.. எண்ட் கார்டு போட்ட சபாநாயகர்!
அதிமுக எங்களை வளர்த்த தாய் கட்சி:
இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் எனக் கூறி தெளிவான விளக்கமளித்தார். சிலர் தேவையில்லாத தகவல்களைப் பரப்புகிறார்கள். அதிமுக எங்களது கட்சி, எங்களை வளர்த்த கட்சி. ஜெயலலிதா அம்மா வழியில் வந்த நாங்கள், திமுக எதிர்ப்பு என்பதில் தெளிவாக இருக்கிறோம். எனவே, கட்சி மாறுவது போன்ற தவறான வதந்திகளைப் பரப்பக் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.
சந்திப்பு குறித்து எம்.எல்.ஏ-க்கள் கூறிய காரணம்:
தொகுதி நலத்திட்டங்கள் மற்றும் மக்கள் பிரச்சனைகளுக்காகவே அமைச்சரைச் சந்தித்ததாக இரு உறுப்பினர்களும் தெரிவித்தனர். ஆகஸ்ட் 19-ஆம் தேதி நீர்வளத்துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தங்களது தொகுதிகளுக்கான பாசனத் திட்டங்களை அதில் சேர்க்க வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாகக் கோவை, தொண்டாமுத்தூர் பகுதியில் ‘அத்திக்கடவு – அவினாசி திட்டம் 2’-ஐச் செயல்படுத்த வேண்டும் என்றும், இது விவசாயிகள் ஜீவாதாரப் பிரச்சனை என்றும் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
இபிஎஸ் குறித்து சி.வி.சண்முகத்தின் அதிரடி பதில்:
மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்களை நிறைவேற்றுவது தற்போதைய அரசின் கடமை என்பதால், தொகுதி வளர்ச்சி மற்றும் விவசாயிகள் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்னிறுத்தியே இந்தச் சந்திப்பு நடந்தது என்றார். அமைச்சரைச் சந்தித்து விட்டு வெளியே வந்தபோது, “அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தீர்களா?” எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குச் சி.வி.சண்முகம், “தேவையற்ற கேள்விகளுக்கு இப்போது பதில் சொல்ல விரும்பவில்லை; அவரை நான் ஏன் சந்திக்க வேண்டும்?” எனச் சீற்றத்துடன் காட்டமாகப் பதிலளித்துச் சென்றார்.
இதையும் படிக்க: திமுகவில் மற்றொரு கைது? முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரண்ட்.. செப். 2 வரை நீதிமன்றம் கெடு!
அரசியல் முக்கியத்துவம்:
எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒதுக்கப்பட்ட கட்சிப் பொறுப்புகளை ஏற்கச் சம்மதிக்காமல் அதிருப்தியில் இருந்து வரும் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆகிய முக்கிய தலைவர்கள், அமைச்சரைச் சந்தித்ததும் இபிஎஸ் குறித்துக் காட்டமாகப் பேசியதும் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் புதிய திருப்பமாகக் பார்க்கப்படுகிறது.