தமிழக வீரர்களுக்கு 15 ஒலிம்பிக் பதக்கங்கள் இலக்கு: SDAT இணை முதன்மை செயல் அதிகாரியாக மயில்வாகனன் நியமனம்..
Olympic 2036 - SDAT Officer: தடகள வீரரான மயில்வாகனன், தமிழ்நாடு காவல்துறை சார்பில் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார். விளையாட்டுத் துறையில் அனுபவம் கொண்ட அவர், காவல்துறை பணியிலும் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
செப்டம்பர் 22, 2026: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) சிறப்பு அதிகாரியாகவும், இணை முதன்மை செயல் அதிகாரியாகவும் ஐபிஎஸ் அதிகாரி மயில்வாகனன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 2036-ஆம் ஆண்டு நடைபெற உள்ள கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் அதிக அளவில் பங்கேற்பதை உறுதி செய்வதுடன், குறைந்தபட்சம் 15 பதக்கங்களை வெல்வதை இலக்காக நிர்ணயித்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ஒலிம்பிக் போட்டிகளுக்கான வீரர்களின் பயிற்சி, தேர்வு மற்றும் தயாரிப்பு உள்ளிட்டவற்றில் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் மயில்வாகனனுக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: முதல் நாளே இப்படியா? கிருஷ்ணகிரி அரசு பள்ளியில் காலை உணவு தட்டுப்பாடு.. பக்கத்து கடையில் இட்லி வாங்கிய அவல நிலை!
2036 கோடைகால ஒலிம்பிக் போட்டி:
2036-ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு இந்தியா தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்தியாவுடன் கத்தார், சவுதி அரேபியா, துருக்கி உள்ளிட்ட நாடுகளும் போட்டியை நடத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. போட்டியை நடத்தும் நாடு பின்னர் முடிவு செய்யப்பட உள்ளது.
தடகள வீரரான மயில்வாகனன், தமிழ்நாடு காவல்துறை சார்பில் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார். விளையாட்டுத் துறையில் அனுபவம் கொண்ட அவர், காவல்துறை பணியிலும் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
மேலும் படிக்க: முதல்வர் விஜய்யுடன் ஏன் லண்டன் செல்லவில்லை? அமைச்சர் கீர்த்தனா ஆதாரத்துடன் விளக்கம்.. என்ன அது!
மயில்வாகனன் திருச்சி மாநகர காவல் துணை ஆணையராகவும், ராமநாதபுரம் மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், சென்னையில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் தென் மண்டல காவல் கண்காணிப்பாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
சிறப்பு அதிகாரியாக மயில்வாகனன் நியமனம்:
இந்நிலையில், விளையாட்டுத் துறையில் அவரது அனுபவத்தையும் நிர்வாகத் திறனையும் பயன்படுத்தி, தமிழக வீரர்களை சர்வதேச அளவிலான போட்டிகளுக்கு தயார்படுத்தவும், குறிப்பாக 2036 ஒலிம்பிக் போட்டிகளை இலக்காகக் கொண்டு வீரர்களின் திறனை மேம்படுத்தவும் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 பதக்கங்கள் என்ற இலக்கை அடைவதற்கான நீண்டகால திட்டங்கள் மற்றும் பயிற்சி நடவடிக்கைகளில் SDAT கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.