சீசன் ஆரம்பம்.. ஆனால் குற்றால அருவிகளில் குளிக்கத் தடை.. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்.. என்ன காரணம்!
Ban On Bathing Courtallam : தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் கடும் வெள்ளப் பெருக்கு காரணமாக அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் குளிப்பதற்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வரும் குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில், மெயின் குற்றாலம், ஐந்தருவி, புலி அருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் ஆகியவற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் குளிப்பதற்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலம் மெயின் அருவியில் அமைக்கப்பட்டிருந்த ஆர்ச் அகற்றப்பட்டு புதிய ஆர்ச் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், சில பராமரிப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன.
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை
இதன் காரணமாக ஏற்கனவே குற்றாலம் மெயின் அருவியில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், பிற அருவிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குளித்து வந்தனர். தற்போது, அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குற்றாலம் பகுதிக்கு வந்துவிட்டு குளிக்க முடியாமல் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று வருகின்றனர்.
மேலும் படிக்க: பாஜகவின் அலிஷா அப்துல்லா சர்ச்சை வீடியோ விவகாரம்.. பிரபல யூடியூபர் முக்தார் கர்நாடகாவில் கைது!




ஜூன், ஜூலையில் தொடங்கும் சீசன்
தொடர்ந்து பெய்து வரும் மழை பொழிவு குறைந்து, அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக தென்காசி மாவட்டத்தில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்த காலகட்டத்தில் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வரும். இதனால், மாவட்டத்தில் உள்ள பல்வேறு அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். மூலிகை கலந்த இந்த நீரில் குளிப்பதற்காக தமிழகம், கேரளம், ஆந்திர பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கமாகும்.
சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் ஏமாற்றம்
இதனால், ஜூன், ஜூலை மாதங்களில் குற்றாலத்தில் சீசன் கலை கட்டும். இந்த நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக பிற அருவிகளிலும் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: தவெக அரசின் முதல் சட்டசபை கூட்டம்.. ஆளுநரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த சபாநாயகர்!