தமிழ்நாட்டின் உரிமையை முதலமைச்சர் அடகு வைத்துள்ளார்.. மேகதாது விவகாரத்தில் முதல்வரை சாடிய உதயநிதி ஸ்டாலின்…
மேகதாது அணை பிரச்சினையில் தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் இணைந்து, ஒன்றிய அரசிடம் மேகதாது அணைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என சட்டப்பேரவையிலேயே நான் வலியுறுத்தியிருந்தேன். இனியும் காலம் தாழ்த்தினால், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஜூலை 28, 2026: மேகதாது அணை விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் கூறியதையும் கேட்கவில்லை; விவசாயிகளின் கோரிக்கைகளையும் ஏற்கவில்லை. இதனால் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேகதாது அணை விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
மேகதாது அணை விவகாரம் – பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்:
இந்த விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கர்நாடகாவுக்குச் சென்று, கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரை சந்தித்துப் பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. மேலும், மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் படிக்க: தவறான விஷயம்… தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம் – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்
இந்த நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜயை கடுமையாக விமர்சித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் உரிமையை முதலமைச்சர் அடகு வைத்துள்ளார்:
மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவிற்குத் தேவை இல்லை என்ற ஒன்றிய இணை அமைச்சரின் பதில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
டெல்லி எஜமானர்களை பகைத்துக் கொள்ளாமலும் – ஆட்சிக்கட்டிலைக் காப்பாற்ற காங்கிரஸுக்கு எதிராக பேசாமலும்,…
— Udhay (@Udhaystalin) July 28, 2026
அந்த பதிவில், “மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவுக்குத் தேவை இல்லை என்ற ஒன்றிய இணை அமைச்சரின் பதில், காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையையே கேள்விக்குறியாக்கியுள்ளது. டெல்லி எஜமானர்களைப் பகைத்துக் கொள்ளாமலும், ஆட்சிக்கட்டிலைக் காப்பாற்றும் நோக்கில் காங்கிரஸுக்கு எதிராக பேசாமலும், தமிழ்நாட்டின் உரிமையை முதலமைச்சர் அடகு வைத்துள்ளார்.
மேலும் படிக்க: மேகதாது அணைக்கு அனுமதி தரக்கூடாது…. பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
இந்த பிரச்சினையில் தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் இணைந்து, ஒன்றிய அரசிடம் மேகதாது அணைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என சட்டப்பேரவையிலேயே நான் வலியுறுத்தியிருந்தேன். கர்நாடகாவில் திரைப்பட வசூல் பாதிக்கப்படும் என்ற பயத்தில், இந்த #SofaModel முதலமைச்சர் எதிர்க்கட்சிகள் கூறியதையும் கேட்கவில்லை; விவசாயிகளின் கோரிக்கையையும் ஏற்கவில்லை.
இனியும் காலம் தாழ்த்தினால், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். எனவே, மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை முறியடிக்க முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.