விவசாய பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மார்க்.. எடப்பாடி பழனிசாமி!
Edappadi Palaniswami : தமிழக வெற்றிக் கழக அரசின் வேளாண் பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மார்க் அளிப்பதாக அதிமு க பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார். மேலும், பட்ஜெட் தொடர்பாக கடுமையான விமர்சனங்களை முன் வைத்து பேசினார் .
தமிழக வெற்றி கழக அரசின் நிகழ் ஆண்டுக்கான விவசாய நிதிநிலை அறிக்கையை துறை அமைச்சர் வினோத் இன்று வியாழக்கிழமை ( ஆகஸ்ட் 6- ஆம் தேதி) தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தவெக அரசின் முதல் வேளாண்மை சட்டை பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்பார்த்து இருந்த விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. கடந்த திமுக ஆட்சியில் 20 துறைகள் ஒன்றாக இணைக்கப்பட்டு வேளாண் பட்ஜெட்டை அறிவித்திருந்தனர். அது போலவே, தற்போதும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், விவசாயிகளுக்கு பயனளிக்கக் கூடிய ஒரு முக்கிய திட்டம் கூட இடம் பெறவில்லை.
வேளாண் பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மார்க்
தவெக அரசு ஆட்சிக்கு வந்தால் ஒரு குவிந்தால் நெல்லுக்கு ரூ.3500, கரும்பு டன்னுக்கு ஆதார விலையாக ரூ.4500 வழங்கப்படுவதாக தெரிவித்திருந்தனர். இந்த அறிவிப்பு பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. விவசாயிகளை ஏமாற்றுகிற நாடக பட்ஜெட் ஆகவே உள்ளது. மொத்தத்தில் இந்த பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மார்க் கொடுக்கலாம். அதிமுக ஆட்சிக்காலத்தில் குடிமராமத்து மூலமாக ஏரிகள், குளங்கள், குட்டைகள் அனைத்தும் தூர்வாரப்பட்டது. இதில், பல்வேறு திட்டங்களை இணைத்து வேளாண் பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: Tamil Nadu Agriculture Budget 2026 : “வெற்றி வான்மகள் திட்டம்” பெண்களுக்கு இப்படி ஒரு அறிவிப்பா.. என்ன அது!




20 துறைகளுக்கு எதற்காக அமைச்சர்
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 16,000 ஏரிகளில் 6 ஆயிரம் ஏரிகள் மட்டுமே தூர்வாரப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் தூர்வாரப்பட்ட ஏரிகளால் தற்போது தண்ணீர் இருந்து வருகிறது. 20 துறைகளையும் ஒன்றாக இணைத்து பட்ஜெட் அறிவிக்கப்பட்டால் அந்த துறைகளுக்கு எதற்காக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற வேண்டும். அத்துடன் அந்த 20 துறைகளுக்கு எதற்காக அமைச்சர்கள் இருக்கின்றனர். மேகதாது அணை மற்றும் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக எதுவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்படவில்லை.
அமைச்சர் 2.30 மணி நேரம் பேசியது மட்டுமே சாதனை
வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் சுமார் 2:30 மணி நேரம் பேசியது தான் வேளாண் பட்ஜெட்டின் சாதனையாக பார்க்கப்படுகிறது. மற்றபடி அதில் சாதனை என்று வேறு எதுவும் இல்லை. தமிழக வெற்றி கழகம் தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் பட்ஜெட்டில் அறிவிப்பதாக இடம் பெறவில்லை என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: Tamil Nadu Agriculture Budget 2026 : விவசாய பட்ஜெட்: எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு.. முழு விவரம்!