Tamil Nadu Agriculture Budget 2026 : விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்.. ரூ.4 ஆயிரம் சிறப்பு ஊக்கத்தொகை..பட்ஜெட்டில் அறிவிப்பு!
Tamil Nadu Budget Agriculture allocation : தமிழக விவசாயிகளுக்கு உயிர்ம உர பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக ரூ. 4 ஆயிரம் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று விவசாயத்துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார். இது குறித்த முழு விவரத்தை பார்க்கலாம் .
தமிழக அரசின் 2026-2027- ஆம் ஆண்டுக்கான விவசாய நிதி நிலை அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து விவசாய நலத்துறை அமைச்சர் வினோத் பேசியதாவது: தமிழகத்தில் விவசாயிகள் உயிர்ம உர பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக ரூ.4 ஆயிரம் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும், மண்வளத்தை காப்பதற்காகவும், மண் புழுக்கள் பாதிப்படையாமல் இருப்பதற்காகவும் உயிர்ம உர பயன்பாட்டை விவசாயிகள் ஊக்குவிக்க வேண்டும். விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்காக நிலையான வேளாண்மை மேம்படுத்துவோம் தரிசு நிலங்கள் மீட்டெடுக்கப்பட்டு மலைவேம்பு, செம்மரம் உள்ளிட்ட பொருளாதார மதிப்புமிக்க மரங்களை ஏக்கருக்கு 200 மரக்கன்றுகள் வீதம் நடவு செய்து வேளாண் காடுகள் உருவாக்கப்படும்.
விவசாயிகளுக்கு விதைகள் அளிக்கப்படும்
விவசாயிகள் சான்று விதைகளை பயன்படுத்துவதால் 25 சதவீதம் வரை மகசூலை அதிகரிக்க இயலும். இதனை நோக்கமாகக் கொண்டு தமிழ்நாடு மாநில விதைகள் மேம்பாட்டு முகமை மூலமாக அரசு விதை பண்ணைகள் விவசாய நிலங்களில் நெல், சிறுதானியங்கள், பயிர் வகைகள், எண்ணெய் வித்துகள், பருத்தி போன்ற பயிர்களுக்கு விதை பண்ணைகள் அமைத்து 43 ஆயிரம் சான்று விதைகள் ரூ. 250 கோடி தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமையிலிருந்து கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு மத்திய மாநில அரசு திட்டங்களின் கீழ் விநியோகம் செய்யப்படும்.
ரூ. 7.35 கோடியில் காட்டு பன்றிகள் தடுப்பு நடவடிக்கை
இதன் மூலம் சுமார் 10 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள். காட்டு பன்றிகள் சேத தடுப்பு திட்டத்தின் கீழ் வனவிலங்குகளில் இருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை தடுப்பதற்காக நவீன கருவிகள் மானிய விலையில் வழங்கப்படும். மேலும் இதற்கான திட்டம் ரூ.7.35 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. காட்டுப் பன்றிகள் மட்டுமின்றி யானை உள்ளிட்ட விலங்குகளால் பயிர்களை சேதப்படுத்துவது தடுக்கப்படும்.
சீமை கருவேல மரங்கள் அகற்ற நடவடிக்கை
பெரும்பாலான மாவட்டங்களில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ள நிலையில் அதில் காட்டு பன்றிகள் தங்கி இருந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி மண்வளத்தை மேம்படுத்துவதற்காக அரசு மற்றும் தனியார் இணைந்து சீமை கருவேல மரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் மேற்பார்வையில் அகற்றப்படும்.