உங்களுக்கு சர்க்கரை நோய் வராமல் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?
Diabetes Prevention: ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கு முன்பே உடலில் இன்சுலின் எதிர்ப்பு போன்ற மாற்றங்கள் ஏற்படுவதால், ஆரம்ப நிலையிலேயே எச்சரிக்கையாக இருப்பது அவசியம். குடும்பத்தில் சர்க்கரை நோய் பாதிப்பு, உடல் பருமன், உடற்பயிற்சியின்மை போன்றவை நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கின்றன.
சர்க்கரை நோய் என்றாலே அதிகப்படியான இனிப்புகளைச் சாப்பிடுவதால் (Diabetes Prevention ) ஏற்படுவது என்ற பொதுவான கருத்து பலரிடம் உள்ளது. இதனால் இனிப்புகளைத் தவிர்த்துவிட்டால் சர்க்கரை நோய் வராது என்றும் சிலர் நம்புகின்றனர். ஆனால், மருத்துவர்களின் கருத்துப்படி சர்க்கரை நோய் ஏற்படுவதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. குறிப்பாக, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே உடலின் வளர்சிதை மாற்றத்தில் பாதிப்புகள் தொடங்கிவிடலாம். எனவே, ஆரம்ப நிலையிலேயே அதைக் கண்டறிந்து வாழ்க்கை முறையில் மாற்றங்களைக் கொண்டுவருவது அவசியமாகும்.
Also Read: அச்சம் வேண்டாம், தடுப்பூசி அவசியம்: நோய் எதிர்ப்பு சக்திக்கு இதுவே ஒரே வழி!
ஆரம்ப அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்
உடலில் இன்சுலின் சுரந்தாலும், அதைச் சரியாகப் பயன்படுத்த முடியாத நிலையே இன்சுலின் எதிர்ப்பு என்று அழைக்கப்படுகிறது. இது சர்க்கரை நோய்க்கு முந்தைய முக்கியமான மாற்றங்களில் ஒன்றாகும். ஆரம்பத்தில் இதற்கான வெளிப்படையான அறிகுறிகள் இல்லாமல் இருக்கலாம். இருப்பினும், இடுப்புப் பகுதியில் கொழுப்பு அதிகரிப்பது, வயிற்றுப் பகுதியில் உடல் எடை கூடுவது, கழுத்து மற்றும் அக்குள் பகுதிகளில் தோல் கருமையாவது போன்றவை எச்சரிக்கை அறிகுறிகளாக இருக்கலாம். சிலருக்கு எந்தவித உடல்நலப் பாதிப்பும் இல்லாதது போலத் தோன்றினாலும், அவர்களுக்கு சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை இருக்க வாய்ப்புள்ளது.
யாருக்கெல்லாம் சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் அதிகம்?
குடும்பத்தில் சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பவர்கள், வயிற்றுப் பகுதியில் அதிக கொழுப்பு கொண்டவர்கள், உடல் உழைப்பு இல்லாமல் நீண்ட நேரம் அமர்ந்திருப்பவர்கள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் ஆகியோருக்கு சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் அதிகம். பெண்களுக்கு பிசிஓஎஸ் (PCOS) பாதிப்பு இருந்தாலும் கவனம் தேவை. குறிப்பாக இந்தியர்களுக்கு மற்றவர்களைவிட இளம் வயதிலேயே சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உடல் எடை இயல்பாக இருப்பதால் மட்டும் சர்க்கரை நோய் அபாயம் இல்லை என்று முடிவு செய்துவிட முடியாது.
எந்தப் பரிசோதனைகள் அவசியம்?
சர்க்கரை நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய வெறும் வயிற்றில் ரத்தச் சர்க்கரை பரிசோதனை மற்றும் ஹெச்பிஏ1சி (HbA1c) பரிசோதனை உதவுகின்றன. தேவைக்கேற்ப குளுக்கோஸ் சகிப்புத்தன்மை பரிசோதனையும் மேற்கொள்ளலாம். இதனுடன் ரத்த அழுத்தம், கொழுப்புச் சத்து மற்றும் இடுப்பின் சுற்றளவு ஆகியவற்றையும் கண்காணிப்பது அவசியம். 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் சர்க்கரை நோய் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. அதிக ஆபத்து உள்ளவர்கள் ஆண்டுதோறும் பரிசோதனை செய்துகொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Also Read: அச்சம் வேண்டாம், தடுப்பூசி அவசியம்: நோய் எதிர்ப்பு சக்திக்கு இதுவே ஒரே வழி!
உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் தடுக்கலாம்
சர்க்கரை நோய் ஏற்படுவதைத் தடுக்கவும், அதன் பாதிப்பைத் தாமதப்படுத்தவும் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் செய்வது முக்கியமானதாகும். அதிக உடல் எடை கொண்டவர்கள் தங்களது எடையில் 5 முதல் 7 சதவீதம் வரை குறைப்பது சர்க்கரை நோய் அபாயத்தைக் குறைக்க உதவும். தினமும் நடைப்பயிற்சி அல்லது மிதமான உடற்பயிற்சி செய்வதுடன், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் புரதச்சத்து நிறைந்த வீட்டில் தயாரித்த உணவுகளைச் சாப்பிட வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட மாவுப் பொருட்கள் மற்றும் சர்க்கரை கலந்த பானங்களைக் குறைக்க வேண்டும். நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதைத் தவிர்த்து இடையிடையே சிறிது நேரம் நடக்க வேண்டும்.