பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை – கோவையில் போலீஸ் ஓட்டுநர் கைது
கோவை, பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றத்திற்காகப் போத்தனூர் காவல் ஆய்வாளரின் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த காவலர் மணிவேந்தன் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர், ஆகஸ்ட் 5 : கோவை, பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றத்திற்காகப் போத்தனூர் காவல் ஆய்வாளரின் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த காவலர் மணிவேந்தன் கைது செய்யப்பட்டு உள்ளார். கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், வழக்கம் போல் பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த பேருந்தில் ஏறி உள்ளார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால், அந்த மாணவி பேருந்தின் படியில் நின்றபடி பயணித்து உள்ளார்.
பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை
அப்போது, அதே பேருந்தில் பயணித்த நபர் ஒருவர், மாணவிக்கு உதவுவது போல நடித்து, அவருக்குப் பாலியல் சீண்டல் கொடுத்துத் தொல்லை அளித்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, ஈச்சனாரி அருகே உள்ள தனது கல்லூரி நிறுத்தத்தில் இறங்கி, இச்சம்பவம் குறித்துப் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தார்.
மாணவி அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், பாலியல் தொல்லையில் ஈடுபட்டது போத்தனூர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளரின் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த காவலர் மணிவேந்தன் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, காவலர் மணிவேந்தன் மீது வழக்குப் பதிவு செய்த பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையப் போலிசார், அவரை கைது செய்தனர். பாதுகாப்பளிக்க வேண்டிய காவலரே பேருந்தில் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு கைதான சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், கோவை கருமத்தம்பட்டி அருகே பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து, ஆபாச வார்த்தைகளால் பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருவதாகக் கூறி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தந்தை மற்றும் மகள் கோவை மேற்கு மண்டல காவல்துறை துணை தலைவரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
கோவை கருமத்தம்பட்டி ராயர்பாளையத்தைச் சேர்ந்த பொன்னுசாமி மற்றும் அவரது மகள் சித்ரா ஆகியோர் கோவை மேற்கு மண்டல காவல்துறை துணை தலைவரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.அதில் தங்களுக்கு சொந்தமான வீடு மற்றும் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்றதாக ஜீவானந்தம், ராஜேந்திரன், மோகன் ஆகிய மூவர் மீது ஏற்கனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் தற்போது நிபந்தனை ஜாமினில் வெளியில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், அந்த வழக்கின் காரணமாக பழிவாங்கும் நோக்கில் மேற்கண்ட மூவரும் தொடர்ந்து தங்களது வீட்டுப் பகுதிக்கு வந்து ஆபாச வார்த்தைகளால் திட்டுவதுடன், பெண்கள் கழிவறைக்கு செல்லும் காட்சிகளை வீடியோ எடுத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.