விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்து போட்டி… தொல்.திருமாவளவன் அதிரடி அறிவிப்பு!
Puducherry Vck : புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். தொகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகாததால் கட்சியினர் மன அழுத்தத்தில் உள்ளதாக அவர் வேதனை தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கம் வகித்து வருகிறது. இதில், திமுக மற்றும் விசிக இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் காங்கிரசுக்கு 16 சட்டமன்ற தொகுதிகளும், திமுகவுக்கு 12 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 1 தொகுதியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 1 தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக அந்த கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுச்சேரியில் அதிக தொகுதிகளை பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யவில்லை.
மேலும் படிக்க: அதிமுக கூட்டணியில் ஜி.கே.வாசன் அதிருப்தி.. கேட்ட தொகுதிகள் கிடைக்காததால் பேச்சுவார்த்தை புறக்கணிப்பு..




விசிக நிர்வாகிகள் மன அழுத்தத்தில் உள்ளனர்
திமுக தரப்பில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அது எந்த தொகுதி என்ற அறிவிப்பு வெளியாகவில்லை. கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள தொகுதிகளிலும் காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதனால், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மன அழுத்தத்தில் உள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் தனித்துப் போட்டி!
—————————————-
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
—————————————–
புதுச்சேரி மாநிலத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடந்த பல ஆண்டுகளாக அங்கம்… pic.twitter.com/sZBatM1LcY— Thol. Thirumavalavan (@thirumaofficial) March 24, 2026
புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் தனித்து போட்டி
எனவே, ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற உள்ள புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்து போட்டியிட உள்ளது. அதன்படி, ஊசுடு, நெட்டப்பாக்கம், உழவர்கரை ஆகிய 3 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வேட்பாளர்கள் தனித்து களம் காண உள்ளனர். இந்த 3 தொகுதிகளை தவிர்த்து மீதமுள்ள 27 தொகுதிகளில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
உழர்கரை தொகுதியில் விசிக பெற்ற வாக்குகள்
புதுச்சேரியில் கடந்த 2001- ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கம் வகித்து தேர்தலை சந்தித்து வருகிறது. அந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் உழவர்கரை தொகுதி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அந்த தொகுதியை விசிக ஏற்றுக்கொண்டது. அந்த தொகுதியிலும் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றிருந்தது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: “அதிமுக கூட்டணி 210 இடங்களில் நிச்சயம் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும்”.. இபிஎஸ் நம்பிக்கை!!