துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கார் தடுத்து நிறுத்தம்.. தேர்தல் பறக்கும் படை திடீர் சோதனை.. முழு விவரம் என்ன!
Udhayanidhi Stalin: கரூர் மாவட்டத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்த தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காரில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனைக்கு உதயநிதி ஸ்டாலின் ஒத்துழைப்பு அளித்தார்.
திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை ( மார்ச் 24) நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தமிழக துணை முதல்வரும், இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதற்காக, அவர் நேற்று திங்கள் கிழமை ( மார்ச் 23) இரவு கரூரிலிருந்து தனது காரில் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது கார் வேடசந்தூர் அருகே உள்ள கல்வார்பட்டி பகுதியில் சென்ற போது, அந்த பகுதியில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காரை போலீசார் மறித்தனர். இதை அறிந்த உதயநிதி ஸ்டாலின் தனது காரில் இருந்து இறங்கி பறக்கும் படையினர் சோதனை மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு அளித்தார்.
துணை முதல்வர் காரில் திவீர சோதனை
அப்போது, தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காரை முழுமையாக சோதனை மேற்கொண்டனர். அதன் பின்னர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கார் அங்கிருந்து புறப்பட்டு திண்டுக்கல்லுக்கு சென்றது. இந்த சோதனையில். வேடசந்தூர் காவல்துறை கண்காணிப்பாளர் பவித்ரா, காவல் உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
மேலும் படிக்க: அதிமுக கூட்டணியில் ஜி.கே.வாசன் அதிருப்தி.. கேட்ட தொகுதிகள் கிடைக்காததால் பேச்சுவார்த்தை புறக்கணிப்பு..




தேர்தல் நடத்தை விதிகளுக்கு உள்பட்டு
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், இந்த விதிகள் அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும். அந்த வகையில் தான், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் காரை நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டிருந்தனர். இதே போல, கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி தமிழக வந்திருந்தார். அப்போது, அவரது காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர். இதே போல, அனைத்து தரப்பினர் கார்களிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் ரூ.151 கோடி மதிப்பு பொருள்கள் பறிமுதல்
தேர்தல் நேரத்தில் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் மற்றும் பரிசு பொருட்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்லப்படுவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் ரூ. 151 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பல்வேறு வகையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட் நாயக் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: “அதிமுக கூட்டணி 210 இடங்களில் நிச்சயம் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும்”.. இபிஎஸ் நம்பிக்கை!!