AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி – முதல்வர் விஜய் அறிவிப்பு..

ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பயிர்க்கடன் பெற்றுள்ள 2,38,264 விவசாயிகளுக்கு தலா ரூ.75 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படும். இதனால், ஏற்கனவே பெற்ற தள்ளுபடித் தொகைக்கு மேலாக ரூ.40 ஆயிரம் வரை கூடுதல் தள்ளுபடி பெறும் வாய்ப்பு ஏற்படும். இந்தக் கூடுதல் பயிர்க்கடன் தள்ளுபடியால் அரசுக்கு சுமார் ரூ.953.06 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும்.

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.. ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி – முதல்வர் விஜய் அறிவிப்பு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 17 Aug 2026 15:51 PM IST

ஆகஸ்ட் 17, 2026: தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் விஜய் இன்று விதி எண் 110-ன் கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது, ரூ.75 ஆயிரம் வரை பயிர்க்கடன் பெற்றிருந்தால், அந்தக் கடன் 100 சதவீதம் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்றும், ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பயிர்க்கடன் பெற்றிருந்தால் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரை தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

விவசாய அமைப்புகளின் கோரிக்கைகளைப் பரிசீலித்து, நிதி நெருக்கடியான சூழ்நிலையிலும் விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில் இந்தக் கூடுதல் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிக்கப்படுவதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் பேசியது:

உலகில் ஜாதி, மதம், இனம், மொழி என அனைத்து வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டு நடைபெறும் தொழில் என்றால், அது விவசாயத் தொழில் மட்டுமே. உலகின் ஒரு மூலையில் உற்பத்தி செய்யப்படும் விவசாயப் பொருட்கள், உலகின் மற்றொரு மூலையில் உள்ள மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்கின்றன. எந்த நாடு உழவுத் தொழிலை மதித்து, விவசாயிகளுக்கு உரிய பாதுகாப்பையும் ஆதரவையும் வழங்குகிறதோ, அந்த நாட்டில்தான் மக்கள் வளமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.

தமிழக வெற்றிக் கழக அரசு பல்வேறு நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றாலும், பதவியேற்ற 15 நாட்களுக்குள் விவசாயிகளின் கடன் சுமையைக் குறைக்கும் வகையில், கடந்த 25.05.2026 அன்று குறு, சிறு மற்றும் இதர விவசாயிகள் பெற்றிருந்த பயிர்க்கடனில் ரூ.50 ஆயிரம் வரையிலான கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது.

பயிர்க்கடன்  தொடர்பாக பரிசீலனை:

அதனைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பல்வேறு விவசாய அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான கோரிக்கைகள் கனிவுடன் பரிசீலிக்கப்பட்டன. நிதி நெருக்கடியான சூழ்நிலையிலும் விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு, குறு, சிறு மற்றும் இதர விவசாயிகளுக்கு ரூ.50 ஆயிரம் வரை முழுத் தள்ளுபடி செய்ய அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தத் தொகையை உயர்த்தி, ரூ.75 ஆயிரம் வரை கடன் பெற்றவர்களுக்கு முழுத் தொகையையும், ரூ.75 ஆயிரத்துக்கும் மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ.35 ஆயிரமும் தள்ளுபடி செய்ய அறிவிக்கப்பட்டது.

இதன்மூலம் 14.44 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,932.23 கோடி அளவிலான கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்து, 19.06.2026 அன்று ஆணையிடப்பட்டது. இதில், 31.07.2026 வரை ரூ.5,267 கோடி விடுவிக்கப்பட்டு, 13.34 லட்சம் விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மு.க.ஸ்டாலின் வரும்போது பேரவையில் பாதி பேர் இருக்க மாட்டீங்க… கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பரபர பேச்சு!

இந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பயிர்க்கடன் தள்ளுபடி தொகையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, 07.08.2026 அன்று விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், மூத்த அமைச்சர்கள் மற்றும் துறைச் செயலாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர்களின் கோரிக்கைகள் விரிவாகப் பரிசீலிக்கப்பட்டன.

கடந்த காலங்களில் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டபோதும், அரசால் கூட்டுறவு வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய தொகை 4 முதல் 5 ஆண்டுகள் கால இடைவெளியில் செலுத்தப்பட்டு வந்துள்ளது. 2021ஆம் ஆண்டில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை, 2021 முதல் 2026 வரையான காலகட்டத்தில் அரசால் 12 தவணைகளாக கூட்டுறவு வங்கிகளுக்குச் செலுத்தப்பட்டுள்ளது.

ஆனால், அந்தக் கால அவகாசம் தற்போது அரசுக்கு இல்லை. இந்திய ரிசர்வ் வங்கியின் 28.11.2025 தேதியிட்ட கடிதத்தில், அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான செயல்பாட்டு நடைமுறைகளின்படி, பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழுத் தொகையையும் அரசு 45 முதல் 60 நாட்களுக்குள் கூட்டுறவு வங்கிகளுக்கு முழுமையாகச் செலுத்த வேண்டும் என்ற வழிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது.

விவசாய கடன் – ரூ.75 ஆயிரம் வரை முழுமையாக தள்ளுபடி:

இந்த வழிகாட்டுதலின்படியும், தமிழ்நாடு அரசின் நிதிநிலை மற்றும் நிதி ஆதாரங்களைக் கருத்தில் கொண்டும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட பயிர்க்கடன்களுக்கு பின்வரும் கூடுதல் தள்ளுபடியை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

  • ரூ.75 ஆயிரம் வரை பெற்றுள்ள பயிர்க்கடன்கள் 100 சதவீதம் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்.
  • ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பயிர்க்கடன் பெற்றுள்ளவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படும்.
  • ரூ.1 லட்சத்துக்கு மேல் பயிர்க்கடன் பெற்றுள்ளவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.35 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படும்.

இதன்மூலம், ரூ.75 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை பயிர்க்கடன் பெற்றுள்ள 2,38,264 விவசாயிகளுக்கு தலா ரூ.75 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படும். இதனால், ஏற்கனவே பெற்ற தள்ளுபடித் தொகைக்கு மேலாக ரூ.40 ஆயிரம் வரை கூடுதல் தள்ளுபடி பெறும் வாய்ப்பு ஏற்படும்.

இந்தக் கூடுதல் பயிர்க்கடன் தள்ளுபடியால் அரசுக்கு சுமார் ரூ.953.06 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். இருந்தாலும், தமிழக விவசாயிகளின் நலனில்தான் நமது நலன் உள்ளது என்று கருதி, சுமார் 13.34 லட்சம் விவசாயிகளுக்கு மொத்தமாக ரூ.6,220 கோடி பயிர்க்கடன் தள்ளுபடியை இந்த அரசு வழங்குகிறது என முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.

Follow Us